சென்னை: சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில், `தமிழ்நாடு இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு ‘ஓமிட்” பொன் விழா ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. இதனை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விழாவில், இக்கூட்டமைப்பின் சார்பில், 12 இஸ்லாமிய கல்வி அறிஞர்கள் உட்பட 13 ஆளுமைகளுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகளையும் அவர் வழங்கினார். விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
பல சமயங்களில் இஸ்லாமிய கல்வி நிறுவனங்களுக்கு மட்டுமல்ல, பிற கல்வி நிறுவனங்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதும் நீங்கள்தான் என்றுச் சொன்னால் அதுவும் மிகையாகாது. நபிகள் நாயகம் கூறிய வாழ்க்கை நெறிமுறைகளில், முக்கியமான ஒன்றை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். கற்பவனாக இரு அல்லது கற்பிப்பவனாக இரு அல்லது கற்பிப்பவர்களுக்கு உதவி செய்பவனாக இரு. இந்த மூன்றையும் தவிர நான்காவது நபராக கண்டிப்பாக இருந்து விடாதே என்பது தான் நபிகள் நாயகம் சொன்ன வார்த்தை. ஒரு முஸ்லிம் தானும் கல்வி கற்று, பிறருக்கும் கல்வி கற்றுக் கொடுப்பதே தான தர்மங்களில் சிறந்ததாகும் என்று நபிகள் நாயகம் கூறியிருக்கிறார்.
எல்லோருக்கும் கல்வி கொடுக்கப்பட வேண்டும் என்று நபிகள் சொன்னார். அதைத்தான் நம் திமுகவும் தொடர்ந்து இந்த மண்ணிலே சொல்லி வருகிறது, செய்து வருகிறது. இப்போதுகூட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் கல்வி உரிமையைப் பாதுகாக்கத்தான் திமுக அரசு தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சியில், இஸ்லாமிய, கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களின் பங்கு மிகப்பெரியது. இஸ்லாமிய மக்கள் கல்வி கற்று, வேலைவாய்ப்பும் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கலைஞர் இஸ்லாமியர்களுக்கு 3.5% உள் இட ஒதுக்கீட்டினை வழங்கினார். ‘எல்லோருக்கும் எல்லாம்’ என்கின்ற அந்த உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில் நடக்கும் அரசுதான் நம் திராவிட மாடல் அரசு.
ஆனால், எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கக்கூடாது என்று நினைப்பவர்கள் நம் திராவிட மாடல் அரசிற்கு பல நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, இப்போது மாநில அரசின் அனுமதி இல்லாமல் ஒன்றிய அரசே பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கலாம் என்ற ஒரு வரைவை யுஜிசி மூலம் கொண்டுவர திட்டமிட்டுள்ளார்கள். இந்த யுஜிசி விதிமுறைகளுக்கு எதிராக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானமே நிறைவேற்றியிருக்கிறார். அதுமட்டுமல்ல, வக்பு வாரிய திருத்த மசோதாவையும் ஒன்றிய அரசு கொண்டு வர முயற்சிக்கிறார்கள்.
பாராளுமன்ற கூட்டுக்குழுவில் திமுக கூட்டணி எம்.பி.க்கள் இதை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்கள். அதனால் கிட்டத்தட்ட 10 எம்.பி.க்களை என்ன, ஏது என்று கேட்காமலே பா.ஜ.க ஒன்றிய அரசு தற்காலிக இடை நீக்கமும் செய்து இருக்கிறது. ஆனாலும், நம் முதல்வர் இஸ்லாமிய மக்களை பாதிக்கின்ற, அந்த முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என்று உறுதியோடு செயல்பட்டு வருகிறார். ஏனென்றால், திமுகவின் வரலாறு அப்படி. பல கோரிக்கைகளை அரசுக்கு நீங்கள் வைத்து இருக்கிறீர்கள். நிச்சயமாக இந்த கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நீங்கள் எந்த உரிமையோடு சொன்னீர்களோ, அதே உரிமையோடு நாங்கள் நிறைவேற்றித் தருவோம், நம் முதல்வர் நிறைவேற்றித் தருவார். நம் திராவிட மாடல் அரசு நிறைவேற்றி தரும் என்ற வாக்குறுதியை இங்கு கொடுக்க விரும்புகிறேன். இஸ்லாமிய மக்களின் பாதுகாப்புக்கும், உங்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கும் திமுக என்றைக்கும் துணை நிற்கும். அயராது பாடுபடும்.இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியை சென்னை மாநகராட்சி கவுன்சிலர் பாத்திமா முசாபர் தொகுத்து வழங்கினார். அமைச்சர் கோவி.செழியன், வக்பு வாரிய தலைவர் நவாஸ் கனி எம்பி, தமிழ்நாடு ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்எல்ஏ, சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் நே.சிற்றரசு, பகுதி செயலாளர் எஸ். மதன்மோகன், இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் ஆசிம், பொதுச் செயலாளர் அகமத் மீரான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
The post எல்லோருக்கும் கல்வி கொடுக்கப்பட வேண்டும் எனும் நபிகள் வாக்கினைத்தான் திமுக நிறைவேற்றி வருகிறது: சென்னையில் நடந்த விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.