இந்தியப் பொருளாதாரத்துக்கு இந்த ஆண்டு எளிதான ஆண்டாக அமையவில்லை என்பதை முதலில் சொல்லியாக வேண்டும். 2024 முதல் 2025 வரையிலான நிதியாண்டின் முதல் காலாண்டில் (அதாவது ஏப்ரல் முதல் ஜூன் 2024 வரையிலான காலாண்டில்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆண்டுக்கு 6.7% வளர்ச்சி கண்டது.
இது கடந்த ஐந்து காலாண்டுகளில் மிகக் குறைந்த வளர்ச்சி என்றாலும், உலகளாவிய நிச்சயமற்ற நிலைமைகள், பணவீக்கம் ஆகியவற்றின் பின்னணியில் இந்தியப் பொருளாதாரம் அடிப்படையில் வலுவாக இருக்கிறது என்றே கருதப்பட்டது. முதல் காலாண்டில் செலவு சார்ந்த, உற்பத்தி சார்ந்த காரணிகள் இரண்டும் சிறப்பாகச் செயல்பட்டன. நுகர்வுச் செலவு (7.4% அதிகரித்தது), மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (7.5%), ஏற்றுமதி (8.7%) ஆகியவை வலுவாக இருந்தன.