புதுடெல்லி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சீமான் மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து குற்றப்பத்திகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சீமான் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.வி.நாகரத்னா மற்றும் சதீஷ் சந்திர சர்மா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘முன்னதாக சம்பந்தப்பட்ட எதிர்மனுதாரரான நடிகையுடன் பழக்கம் இருந்தது. அதன் பின்னர் இருவரும் ஒருமித்த கருத்துடன் பிரிந்து விட்டனர். இருப்பினும் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை மூன்று முறை நடிகை திரும்பப்பெற்று விட்டார். தற்போது மீண்டும் புகார் அளித்துள்ளார். குறிப்பாக கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு அரசியல் ரீதியாக இந்த வழக்கு மீண்டும் எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘இந்த விவகாரத்தில் எதிர்தரப்பு மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளாரே. அதற்கு மனுதாரரின் பதில் என்ன?. அவர்களது பாதிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டியது உள்ளது. மேலும் அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அதுகுறித்து இருதரப்பும் பேசி முடிவெடுக்க வேண்டும். அதாவது இந்த விவகாரத்தில் இருதரப்புக்கும் செட்டில்மெண்ட் அடிப்படையில் முடிவு எட்டப்படுமா என்று பார்க்க வேண்டும். இருப்பினும் இந்த விவகாரத்தில் 12 வாரத்தில் வழக்கின் விசாரணையை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கிறது என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.
The post ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை பாதிக்கப்பட்ட நடிகைக்கு என்ன பதில் சொல்லப்போறீங்க? சீமானுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி கேள்வி appeared first on Dinakaran.