புதுடெல்லி: மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் வில்சன் பேசுகையில், ‘‘2023-24ம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டில், வெறும் 2.5சதவீதம் மட்டுமே தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டது. குறிப்பாக ஒன்றிய அரசால் நிதியளிக்கப்படும் திட்டங்களுக்கான சுமையை மாநில அரசின் மீது ஒன்றிய அரசு படிப்படியாக தினித்து வருகிறது.அதற்கு மிகச்சிறந்த உதாரணம், மலிவு விலை வீடுகள் திட்டத்தில் ஒன்றிய அரசு ஒரு வீட்டிற்கு ரூ.1.5 லட்சமும், தமிழ்நாடு அரசு ரூ.12 முதல் 14 லட்சமும் பங்களிக்கிறது.
தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளாக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் எதற்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் பல்வேறு சுற்றுலா மேம்பாட்டுத் திட்டங்களுக்கான முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டு கிடப்பில் உள்ளது. தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதிப்பங்களிப்பையும்,ஆதரவையும் வழங்க வேண்டும்.இவ்வாறு காரசாரமாக பேசினார்.
மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் ஆர். கிரிராஜன்: உயர்கல்விக்கான அரசின் செலவுகள், மொத்த பதிவு விகிதத்தை மேம்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதற்கான நிதி ஒதுக்கீடு விவரங்கள் என்ன?” என கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு ஒன்றிய இணை அமைச்சர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், “கடந்த 5 ஆண்டுகளில் உயர் கல்விக்கான முதலீடு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கல்வி முறையை வலுப்படுத்துவதையும், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாக கொண்டு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் விமானப் போக்குவரத்து மசோதா மீதான விவாதத்தில் கனிமொழி என்.வி.என். சோமு பேசுகையில், “ இந்த அரசு சொந்தமாக விமானங்களை உற்பத்தி செய்யவில்லை.
சொந்த விமானங்கள் இல்லை. சொந்தமாக இருந்த விமான நிலையங்களையும் தனியாருக்கு தாரை வார்த்துவிட்ட நிலையில் எதற்காக இந்த மசோதா என்பது கேள்வியாக உள்ளது. விமானத்துறையில் அமெரிக்கா மற்றும் பிரான்சின் உதவியை இந்தியா இன்னும் முழுமையாக நம்புகிறது. விமான போக்குவரத்து அமைச்சகம் தனது முக்கியத்துவத்தை இழந்து விட்டது.காரணம் தனியார் நிறுவனங்களுக்கு மிகுந்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. ஓசூர் சர்வதேச விமான நிலையம் நிறுவ ஒன்றிய அரசு அனுமதி தர வேண்டும்” என்றார்.
The post ஒன்றிய அரசு நிதி திட்டங்களின் சுமையை மாநிலங்களின் மீது திணிக்க கூடாது: மாநிலங்களவையில் திமுக வலியுறுத்தல் appeared first on Dinakaran.