விலை குறையும் பொருட்கள்:
* புற்றுநோய் உள்ளிட்ட 36 உயிர் காக்கும் மருந்துகள்
* லித்தியன் அயன் பேட்டரிகளின் கழிவுகள், லீட், ஜிங்க் உள்ளிட்ட 12 வகையான முக்கிய கனிமங்கள்
* செல்போன் சார்ஜர்
* தொலைதொடர்பு உபகரணங்கள்
* எலக்ட்ரிக் பொம்மைகள்
* தோல் ஜாக்கெட்
* தோல் ஷூக்கள்
* தோல் பெல்ட்
* தோல் பர்ஸ்
* உறைந்த மீன் பேஸ்ட்
* கேரியர் கிரேடு ஈத்தர்நெட் ஸ்விட்ச்கள்
* ரூ.35 லட்சத்துக்கு மேல் அல்லது 3,000 சிசிக்கு மேல் விலை கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட கார்கள்
* 1600 சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட இன்ஜின் திறன் கொண்ட இறக்குமதி செய்யப்பட்ட பைக்குகள்
* 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பயணிக்கக் கூடிய இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள்
* உணவு மற்றும் குளிர்பான தொழில்களில் பயன்படுத்தப்படும் செயற்கை சுவையூட்டும் எஸ்ஸென்ஸ் மற்றும் கலவைகள்
* நகை பொருட்கள்
விலை அதிகரிக்கும் பொருட்கள்:
* ஸ்மார்ட் மீட்டர்
* சோலார் செல்கள்
* இறக்குமதி செய்யப்பட்ட காலணிகள்
* இறக்குமதி செய்யப்பட்ட மெழுகுவர்த்திகள் மற்றும் டேப்பர்கள்
* இறக்குமதி செய்யப்பட்ட பாய்மரப் படகுகள் மற்றும் பிற படகுகள்
* பிவிசி பிளெக்ஸ் பிலிம்கள், ஷீட்கள், பேனர்கள்
* இறக்குமதி செய்யப்பட்ட சில பின்னப்பட்ட துணிகள்
* முழுமையாக உருவாக்கப்பட்டவையாக இறக்குமதி செய்யப்படும் பிளாட் பேனல் டிஸ்பிளேக்கள்.
* நடுத்தர மக்களை கைவிட்ட ஒன்றிய அரசு தயாநிதி மாறன் கருத்து
மத்திய சென்னை திமுக எம்.பி தயாநிதி மாறன் கருத்து தெரிவிக்கையில், நடுத்தர மக்களை ஒன்றிய அரசு கைவிட்டுவிட்டது. ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லை என்று அறிவித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த வரியிலேயே ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 10 சதவீத வருமான வரி என்று அறிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவைக்கு தேர்தல் வருவதால் அந்த மாநில மக்களை ஏமாற்ற பல திட்டங்களை அறிவித்துள்ளார்கள். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு மற்றும் தென் மாநிலங்களை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை என்றார்.
* வருமான வரி விலக்கால் 1 கோடி பேர் பயனடைவர்
பட்ஜெட்டுக்கு பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும் வகையில் வரி விகிதங்களை குறைத்துள்ளோம். இதனால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு. வருமான வரி விலக்கால் இனி 1 கோடி பேர் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை. தற்போது 75 சதவீதம் பேர் புதிய வருமான வரி விகிதத்திற்கு மாறி உள்ளனர். விரைவில் 100 சதவீதம் பேரும் புதிய வருமான வரி விகிதத்திற்கு மாறுவார்கள் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.
பட்ஜெட்டில் சில நிகழ்வுகள்
* பட்ஜெட் உரை தொடங்கிய போது, மகா கும்பமேளா நெரிசல் விவகாரத்தை குறிப்பிட்டு அமளி செய்த சமாஜ்வாடி, காங்கிரஸ் எம்பிக்கள் ‘மத விரோத அரசு ஒழிக’ என முழக்கமிட்டனர்.
* பட்ஜெட் உரையின் நிறைவாக வருமான வரிச் சலுகையை நிர்மலா சீதாராமன் அறிவித்த போது, ஆளுங்கட்சி எம்பிக்கள் மேசையை தட்டி ‘மோடி, மோடி’ என மகிழ்ச்சியில் முழக்கமிட்டனர். எதிர்க்கட்சி எம்பிக்கள் அதை அமைதியுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
* நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 10.52 மணிக்கு மக்களவைக்குள் நுழைந்தார். அவரை ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்கள் வரவேற்றனர்.
* பிரதமர் மோடி காலை 11 மணிக்கு சில நொடிகள் முன்பாக அவைக்குள் நுழைந்தார். அப்போது பாஜ எம்பிக்கள் ‘பாரத் மாதா கீ ஜெய்’ என்று கோஷமிட பதிலுக்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் ‘ஜெய் பீம்’, ‘ஜெய் சம்விதான்’ (வாழ்க அரசியலமைப்பு) என கோஷமிட்டனர்.
* நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொன்னிற பார்டருடன், மதுபானி கலை வடிவத்தில் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட வெள்ளை நிற சேலையை உடுத்தியிருந்தார்.
* பட்ஜெட்டில் பீகார் நெடி அதிகமாக வீசியது. அடுத்தடுத்து பீகார் தொடர்பான திட்டங்களை நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வாசித்த போது, கூட்டணி நிர்ப்பந்ததால் இந்த அறிவிப்புகள் இடம் பெறுவதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் கேலி செய்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது.
* பட்ஜெட் உரையை நிகழ்த்தி முடித்ததும், நிர்மலா சீதாராமன் இருக்கைக்கு சென்ற பிரதமர் மோடி அவருக்கு வணக்கத்துடன் வாழ்த்து தெரிவித்தார். இதே போல, ஒன்றிய அமைச்சர்கள், எம்பிக்களும் அவரை சூழ்ந்து நின்று பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.
* 120 புதிய விமான நிலையங்கள்; 32 சதவீதம் நிதி குறைப்பு
புதுடெல்லி: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், உதே தேஷ் கா ஆம் நாக்ரிக் பிராந்திய விமான இணைப்பு திட்டம் இதுவரை 88 விமான நிலையங்களை இணைத்துள்ளது. 619 வழித்தடங்களை செயல்படுத்த உதவியுள்ளது. 1.5கோடி நடுத்தர மக்களின் வேகமான பயணத்திற்கான விருப்பத்தை பூர்த்தி செய்துள்ளது. இதன் வெற்றியால் ஈர்க்கப்பட்டு அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி கூடுதல் பயணிகள் பயன்பெறும் வகையில் 120 புதிய விமான நிலையங்கள் அமைப்பதற்காக மாற்றியமைக்கப்பட்ட உதான் திட்டம் தொடங்கப்படும். கூடுதலாக பாட்னா விமான நிலையம் விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் எதிர்கால தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பீகாரில் கிரீன்பீல்ட் விமான நிலைய வசதி செய்யப்படும்.
* நிதி குறைப்பு
உதான் திட்டத்துக்கு கடந்த 2024-2025 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.540 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதி ஒதுக்கீட்டில் நடப்பு நிதியாண்டில் ஒதுக்கப்பட்ட ரூ800 கோடியை விட 32 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
* பருப்பு உற்பத்தியில் தன்னிறைவடைய 6 ஆண்டுகள் இலக்கு
2025-26 நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்தியா பருப்பு உற்பத்தியில் தன்னிறைவடைய 6 ஆண்டுகள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, மசூர் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிப்பதில் அரசு கவனம் செலுத்தும். இதற்காக புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். பருப்பு உற்பத்தியை அதிகரிப்பதற்காக சிறந்த சாகுபடியை தரும் பருப்பு விதைகள் நாடு முழுவதும் விநியோகிக்கப்படும். இந்த முன்முயற்சியின்கீழ், இந்திய தேசிய வேளாண் சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு, இந்திய தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளும் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து நான்காண்டுகளுக்கு பருப்புகள் கொள்முதல் செய்யப்படும்” என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
* இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் மாற்றம்
அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை (பிஐடி) முதலீட்டாளர்களுக்கு சாதகமானதாக மாற்ற ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளதாக பட்ஜெட்டில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கவும், ‘முதலில் இந்தியாவை மேம்படுத்துவோம்’ என்ற உணர்வுடனும் தற்போதைய இருநாடுகளுக்கு இடையேயான இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் முதலீட்டாளர்களுக்கு சாதகமான மாற்றங்கள் கொண்டுவரப்படும் என அவர் கூறி உள்ளார். 2015ல் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் இந்தியா மாற்றங்களை செய்தது. இந்த ஒப்பந்தத்தை சில நாடுகள் மட்டுமே ஏற்றுக் கொண்டன. பல நாடுகள், குறிப்பாக வளர்ந்த நாடுகள் இந்தியாவின் வரி விதிப்பு மற்றும் சட்ட பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் முரண்பட்டன. இதனால் சில ஒப்பந்தங்கள் கைவிட்டு போன நிலையில், உலகளாவிய முதலீட்டு விதிமுறைகளுடன் இணங்கும் வகையில் மாற்றங்கள் செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
* 1 கோடி டெலிவரி தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை
நகர்ப்புற தொழிலாளர்களின் சமூக-பொருளாதார மேம்பாட்டை நோக்கமாகக் கொண்ட திட்டத்தை செயல்படுத்துவதற்கான திட்டங்களையும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் வெளியிட்டார். அதன்படி, ஆன்லைன் தளங்களின் டெலிவரி தொழிலாளர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அவர்கள் ‘ஷ்ரம் போர்டலில்’ பதிவு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மேலும் அவர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்படும். அவர்கள் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனாவின் கீழ் மருத்துவ வசதி கிடைக்கும். கிட்டத்தட்ட 1 கோடி தொழிலாளர்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.
* ஒன்றிய அமைச்சர்கள் சம்பளத்துக்கு ரூ. 1024 கோடி
அமைச்சர்கள் சம்பளம், அமைச்சரவை செயலகம், பிரதமர் அலுவலகம்(பிஎம்ஓ), அரசின் விருந்தினர்களின் செலவுகளுக்காக ரூ.1024.30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024-25ம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.1021.83 கோடியை விட சற்று அதிகம். ஒன்றிய நிதி அமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அமைச்சர்களின் சம்பளத்துக்கு ரூ.619.04 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் ரூ.540.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்திற்கு ரூ.182.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ரூ.270.08 கோடி ஆகும். கடந்த ஆண்டு அமைச்சரவை செயலகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.73.98 கோடி. தற்போது ரூ.75.68 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் அலுவலகத்திற்கு கடந்த ஆண்டு ரூ.65.30 கோடி ஒதுக்கப்பட்டது. தற்போது ரூ.70.91 கோடி ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.அரசு விருந்தினர்களின் விருந்தோம்பல்,பொழுது போக்கு நிகழ்ச்சிகளுக்கு ரூ.4 கோடியை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளனர்.
The post ஒன்றிய பட்ஜெட் 2025 எந்த பொருட்கள் விலை அதிகரிக்கும், குறையும்? appeared first on Dinakaran.