பெரம்பூர் : ஓய்வுபெறும் நாளில் சப்-இன்பெக்டருக்கு சல்யூட் அடித்த அயனாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தனது ஜீப்பில் வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.காவல்துறையில் பணிபுரியும் காவலர்கள் பணி ஓய்வுபெறும் நாளில் மாலை மரியாதையுடன் சக காவல்துறையினர் சார்பில் வழியனுப்பி வைப்பது வழக்கம். சில காவல் நிலையங்களில் இது சம்பிரதாயமாக கடைபிடிக்கப்படுகிறது.
சில காவல் நிலையங்களில் இதனை பெரிதுபடுத்த மாட்டார்கள்.
உயர் அதிகாரிகள் ஓய்வுபெறும் போது பெரிய மைதானங்களில் விழா வைத்து அவர்களுக்கு பணி நிறைவு உபசரிப்பு நடத்தி வழியனுப்பி வைக்கப்படுவார்கள். ஆனால் சாதாரண காவலர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள பணிநிறைவு பெறும்போது விழாக்கள் பெரிய அளவில் நடைபெறாது.
பணிஓய்வு பெறும் காவலரின் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு வந்து காவலர்களை மாலை அணிவித்து அவர்களை கௌரவப்படுத்தி அனுப்பி வைப்பது ஒரு சம்பிரதாயமாக இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் அயனாவரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் ஓய்வுபெறும் நாளில் அவருக்கு அயனாவரம் காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட மரியாதை அவரது கண்களில் ஆனந்த கண்ணீரை வரவழைத்தது.
அயனாவரம் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் முருகன்(60). இவர் கடந்த 40 ஆண்டுகளாக காவல்துறையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் அவர் 60 வயது எட்டியதால் ஓய்வு பெற்றார்.
இதனை முன்னிட்டு அயனாவரம் காவல் நிலைய போலீசார் சார்பில் அயனாவரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தினர். அதனைத்தொடர்ந்து காவல் நிலையத்திற்கு வந்த சப் இன்ஸ்பெக்டர் முருகனுக்கு, அயனாவரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பரணிநாதன் சல்யூட் அடித்து தனது வாகனத்தில் முன்பக்க இருக்கையில் அமர வைத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
பதிலுக்கு சப் இன்ஸ்பெக்டர் முருகனும் நெகிழ்ச்சியுடன் இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்து விடை பெற்றார். காவல் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக நல்ல முறையில் பணியாற்றிய சப்-இன்ஸ்பெக்டர் முருகனுக்கு அயனாவரம் போலீசார் கொடுத்த இந்த பிரிவு உபச்சாரம் நிகழ்ச்சியால் அவரது குடும்பத்தினர் ஆனந்தக் கண்ணீருடன் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
The post ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் அடித்த இன்ஸ்பெக்டர் : அயனாவரத்தில் நெகிழ்ச்சி சம்பவம் appeared first on Dinakaran.