புதுடெல்லி: இந்தியா – இலங்கை இடையான 1974 மற்றும் 1976ம் ஆண்டு ஒப்பந்தப்படி கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்து கொடுத்தது செல்லாது என அறிவிக்கக் கோரி கடந்த 2008ம் ஆண்டு அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவும், அதேபோல ஏ.கே.செல்வராஜ் என்பவர் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் கடந்த 2009 ஜனவரி 5ம் தேதியன்று உச்ச நீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது. பின்னர் வழக்கு விசாரணை விரைந்து நடைபெறாததால், இவ்வழக்கை விரைந்து விசாரிக்கக்கோரி கடந்த 2012 செப்டம்பர் 18ம் தேதி ஜெயலலிதா சார்பில் மீண்டும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை பொறுத்தவரை ஜெயலலிதா கடந்த 2011ம் ஆண்டு தமிழக முதல்வராக பதவியேற்றதும், கச்சத்தீவு ஒப்பந்தம் குறித்த அனைத்து தகவல்களையும் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த் துறையும் இந்த வழக்கில் பிரதிவாதியாக சேர்த்துக் கொள்ளப்பட்டது.
மேலும் இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தரப்பிலும் தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டது. மேற்கண்ட வழக்குகள் கடப்த 2020ம் ஆண்டு நடந்த விசாரணைக்கு பின்னர், தற்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் முதல் மனுதாரரான ஏ.கே.செல்வராஜ் தரப்பின் வழக்கறிஞர் காலமாகி விட்டதால், அதுகுறித்த வக்காலத்தை தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார். அதேபோல் திமுகவின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதல்வருமான மு.கருணநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர வில்சன், ‘இந்த வழக்கின் மனுதாரர் இறந்து விட்டதால், புதிய பதிவுகளை நாங்கள் தாக்கல் செய்ய உள்ளோம்.
அதுகுறித்த விண்ணப்பமும் உச்ச மீது மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கின் எங்கள் தரப்பு மனுதாரராக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவை இணைக்க வேண்டும்’ என்று கூறினார். அனைத்து தரப்பு கோரிக்கையும், டி.ஆர்.பாலுவை மனுதாரராக ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி, வழக்கின் விசாதணையை வரும் செப்டம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் அன்றைய தினம் கச்சத்தீவு மீட்பு தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் உத்தரவிட்டனர்.
The post கச்சத்தீவு மீட்பு வழக்கு: திமுக பொருளாளர் டிஆர் பாலுவை மனுதாரராக சேர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.