திருமலை: கடை வாடகை தகராறில் பெண்ணை கொன்று சடலம் மீது ஏறி செல்பி வீடியோ எடுத்தபடி நடனமாடிய சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் புப்ராஜ்சவுத்ரி. இவரது மனைவி கமலாதேவி(55). தம்பதிக்கு வாரிசு இல்லை. இவர்கள் இருவரும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் ஐதராபாத் கிருஷ்ணா நகரில் வீடு கட்டி குடியேறினர். மேல்மாடியில் வசிக்கும் இவர்கள், தரைதளத்தில் 2 கடைகளை வாடகைக்கு விட்டிருந்தனர்.
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் புப்ராஜ்சவுத்ரி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் கமலாதேவி தனியாக வசித்து வந்தார். கடையை 2 வாலிபர்கள் நடத்தி வருகின்றனர். இவர்கள் கடை வாடகையை சரிவர தரவில்லையாம். கடந்த 10ம்தேதியும் கமலாதேவி, வாடகை தருமாறு கேட்டுள்ளார். இதனால் இருதரப்புக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த 2 வாலிபர்களும், கமலாதேவியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த 11ம்தேதி இரவு தங்கள் கடையை பூட்டிவிட்டு மேல்தளத்தில் வசிக்கும் கமலாதேவியின் வீட்டுக்கு 15 வயது சிறுவனுடன் சென்று அவரை சரமாரி தாக்கி கொன்றுள்ளனர்.
பின்னர் அந்த 3 பேரும் கமலாதேவியின் சடலத்தின் மீது ஏறி `செல்பி’ எடுத்தபடி நடனமாடியுள்ளனர். பின்னர் அதனை வீடியோ எடுத்து தனக்கு நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். அதன்பின்னர் கமலாதேவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதுபோல் சித்தரித்து விட்டு வெளிப்பகுதியில் பூட்டிக்கொண்டு தப்பியுள்ளனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் கமலாதேவியின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. அதேவேளையில் கமலாதேவி கொல்லப்பட்டு அவர் மீது ஏறி 3 பேரும் டான்ஸ் ஆடிய வீடியோக்களும் இணையதளங்களில் வைரலானது. இதனை பலர் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த குஷைகுடா போலீசார் நேற்றுமுன்தினம் கமலாதேவியின் வீட்டின் பூட்டை உடைத்து சடலத்தை மீட்டனர். தனிப்படை போலீசார் கொலையாளிகள் 3 பேரையும் தீவிரமாக தேடிவருகின்றனர்.
The post கடை வாடகை தகராறில் வெறிச்செயல் பெண்ணை கொன்று சடலம் மீது ஏறி நடனமாடி வீடியோ எடுத்த கொடுமை: சிறுவன் உட்பட 3 பேருக்கு வலை appeared first on Dinakaran.