மும்பை: கண் கட்டு வித்தை போல் மலையாள நடிகை, மகளிடம் பணம் பறிப்பு சம்பவம் மும்பையில் ஆட்டோ ஓட்டுநர்களால் அரங்கேறியது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையின் தாதர் ரயில் நிலையம் உள்ளிட்ட பரபரப்பான பகுதிகளில், ஆட்டோ ஓட்டுநர்கள் பயணிகளை ஏமாற்றும் நூதன மோசடி முறை தொடர்ந்து நடந்து வருகிறது. பயணிகளின் கவனத்தை திசை திருப்புவதற்காக, ஆட்டோக்களுக்குள் திடீரென நீல நிற ஒளியைப் பாய்ச்சி, அவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்திப் பணத்தைப் பறிப்பதே இந்தக் கும்பல்களின் வாடிக்கையாக உள்ளது.
இந்தச் சூழலில், பிரபல மலையாள நடிகை லாலி மற்றும் அவரது மகளும் நடிகையுமான அனார்க்கலி மரைக்கார் இந்த மோசடிக் கும்பலிடம் சமீபத்தில் சிக்கியுள்ளனர். மும்பை தாதர் ரயில் நிலையத்திற்கு வெளியே ஆட்டோவிற்காகக் காத்திருந்தபோது, ஒருவர் இவர்களுக்கு உதவி செய்வது போல நடித்து ஆட்டோவில் ஏற்றிவிட்டுள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநர், தன்னிடம் இருந்த 200 ரூபாய் நோட்டுகள் 7-ஐ கொடுத்துவிட்டு (ரூ.1,400), அதற்குப் பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் 3-ஐ (ரூ. 1,500) தருமாறு கேட்டுள்ளார். மீதி 100 ரூபாயை பயணக் கட்டணத்தில் கழித்துக் கொள்வதாகவும் கூறியுள்ளார். இவர்கள் பணத்தை சரிபார்த்துக் கொண்டிருந்தபோது, ஆட்டோவிற்குள் திடீரென நீல நிற ஒளி பரவியுள்ளது.
இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்தி, நடிகைகள் கொடுத்த 500 ரூபாய் நோட்டுகளை லாவகமாக மாற்றிய ஓட்டுநர், அவர்கள் கொடுத்தது 100 ரூபாய் நோட்டுகள் என்று கூறி (200 ரூபாய் நோட்டுகள் 6) பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, ஆட்டோ பழுதாகிவிட்டது எனக் கூறி இறங்கிச் சென்றுவிட்டார். உடனடியாக, இவர்களுக்கு முதலில் உதவிய நபர் மற்றொரு காரை ஏற்பாடு செய்து அனுப்பியுள்ளார். சிறிது தூரம் பயணித்த பிறகே, தங்களிடம் இருந்து 1,200 ரூபாய் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்ந்துள்ளனர். கண் கட்டு வித்தை போல தங்களை ஏமாற்றியதாக நடிகை லாலி தனது சமூக வலைதளப் பதிவில் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
The post கண் கட்டு வித்தை போல் மலையாள நடிகை மகளிடம் பணம் பறிப்பு: மும்பையில் அரங்கேறிய நூதன மோசடி appeared first on Dinakaran.