சத்தர்பூர்: மகா கும்பமேளாவுக்காக இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களின் கதவுகள் திறக்கப்படாததால் சத்தர்பூரில் உள்ள 2 ரயில் நிலையங்களில் காத்திருந்த பயணிகள், ரயில்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். மகா கும்பமேளா நடைபெறும் உத்தர பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜை நோக்கி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 13,000 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 3,000க்கும் மேற்பட்டவை சிறப்பு ரயில்கள் ஆகும். புனித நீராட மிகவும் சிறப்பு வாய்ந்த மவுனி அமாவாசை இன்று என்பதால், வட மாநிலங்களின் அனைத்து ரயில் நிலையங்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.
அந்த வகையில் நேற்று முன்தினம் இரவு, மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மற்றும் ஹர்பால்பூர் ஆகிய 2 ரயில் நிலையங்களுக்கு வந்த சிறப்பு ரயில்களின் பெட்டிகளில் பயணிகள் ஏற்கெனவே நிரம்பியிருந்ததால் கதவுகள் திறக்கப்படாமல் இருந்துள்ளன. ரயில் நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருந்த பயணிகள், அந்த ரயில் பெட்டிகளை நோக்கி கல் வீசி தாக்கி, கதவுகளை வலுக்கட்டாயமாக திறக்க முயன்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார், ரயில் பெட்டிகளின் கதவுகளை திறந்துவைத்து, நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து மகா கும்பமேளாவில் நீராட சத்தர்பூரிலிருந்து பிரயாக்ராஜ் புறப்பட்ட பயணி ஆர்.கே.சிங் கூறுகையில், ‘ரயில்வே போலீசார் ரயிலின் கதவுகளைத் திறந்தனர். ஏற்கெனவே ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலரால் ரயிலில் ஏற முடியவில்லை’ என்றார்.
The post கதவுகள் திறக்கப்படாததால் ரயில் ெபட்டிகள் மீது கல்வீசி தாக்குதல்: கும்பமேளா பக்தர்கள் ஆவேசம் appeared first on Dinakaran.