புதுடெல்லி: புதுடெல்லி தொகுதியில் நேற்று பிரசாரம் செய்ய சென்ற கெஜ்ரிவால் மீது பாஜ தொண்டர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது. அதே நேரம்., கெஜ்ரிவாலின் கார் மோதி 2 பாஜ தொண்டர்கள் காயமடைந்து இருப்பதாக பாஜ குற்றம்சாட்டி உள்ளது. டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 15 நாட்களே உள்ளதால் பிரசாரம் தீவிரமாகி உள்ளது. ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்தும், தான் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியிலும் கெஜ்ரிவால் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று காலை அவர் புதுடெல்லி தொகுதியில் பிரசாரம் செய்ய சென்றார்.
அப்போது, அவருக்கு பாஜ தொண்டர்கள் சிலர் கருப்பு கொடி காட்ட முயன்றனர். அவருடைய காரின் முன்பாக ஒரு வாலிபர் வந்து நின்று சிறிய கருப்புத் துண்டை காட்டினார். கெஜ்ரிவாலின் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை உடனடியாக அங்கிருந்து அகற்றினர். அப்போது, அங்கிருந்த பாஜ தொண்டர்கள், கெஜ்ரிவாலுக்கு எதிராக கோஷமிட்டனர். அவருடைய கார் மீது கல் ஒன்று பறந்து வந்து விழுந்தது. கண்காணிப்பு கேமிராவில் பதிவான இந்த வீடியோ காட்சிகளை ஆம் ஆத்மி வெளியிட்டுள்ளது. இதனால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், கெஜ்ரிவால் மீது தனது கட்சித் தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டை பாஜ மறுத்தது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் புதுடெல்லி தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர் பர்வேஷ் வர்மாவின் ஆதரவாளர்கள் என ஆம் ஆத்மி குற்றம்சாட்டி உள்ளது. அதே நேரம், கெஜ்ரிவாலின் கார் மோதியதில் பாஜ தொண்டர்கள் 2 பேர் காயமடைந்து இருப்பதாகவும், அவர்கள் லேடி ஹர்டிங்கே மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு இருப்பதாகவும் பர்வேஷ் குற்றம்சாட்டினார். ஆனால், ஆம் ஆத்மி தலைவர்கள் இதை மறுத்தனர்.
இது தொடர்பாக பர்வேஷ் வர்மா கூறுகையில், ‘ஆம் ஆத்மி தொண்டர்கள் தான் பாஜ தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர்,’ என தெரிவித்தார். பின்னர் அவர் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், ‘கெஜ்ரிவாலின் கார் மோதியதால் பாஜவை சேர்ந்த 2 இளைஞர்கள் காயமடைந்துள்ளனர். அவர்கள் லேடி ஹர்டிகே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தால், மனித உயிர்களின் மதிப்பை கெஜ்ரிவால் மறந்து விட்டார்,’ என குற்றம்சாட்டி உள்ளார். இதைத் தொடர்ந்து, லேடி ஹர்டிங்கே மருத்துவமனைக்கு சென்ற புதுடெல்லி தொகுதி பாஜ எம்பி.யான பன்சூரி சுவராஜ், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பாஜ தொண்டர்களிடம் நலம் விசாரித்தார்.
பிரசாரத்தின் போது கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தப்பட்டது இது முதல் முறையல்ல. ஏற்கனவே ஒருமுறை பாதயாத்திரை சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்த போதும், அவர் மீது பாஜ.வினர் தாக்குதல் நடத்தியதாக கடந்த மாதம் ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
* தாக்குதல் நடந்ததா? போலீசார் விளக்கம்
போலீசார் கூறுகையில், ‘கெஜ்ரிவாலின் கார் மீது யாரும் கல்வீசி தாக்குதல் நடத்தவில்லை. அவருக்கு சிலர் கருப்பு கொடி மட்டுமே காட்ட முயன்றனர். அவர்கள் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டனர்,’ என தெரிவித்தனர்.
The post கருப்புக் கொடி காட்டி கல்வீச்சு கெஜ்ரிவால் கார் மீது பாஜ.வினர் தாக்குதல்: புதுடெல்லி தொகுதியில் பரபரப்பு appeared first on Dinakaran.