இந்தியா பல்வேறு துறைகளிலும் புதிய வேகத்தோடு முன்னேறி வருகிறது. புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி உலகுக்கு அளித்து வருகிறது. கரோனா காலத்தில் தடுப்பு மருந்துகளை தயாரித்து உலக நாடுகளுக்கு இலவசமாக விநியோகம் செய்தது. அடுத்ததாக, யூபிஐ எனப்படும் மொபைல் போன் மூலம் பணம் செலுத்தும் தொழில்நுட்பத்தை உருவாக்கியது. அது தற்போது இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, நேபாளம் என பரவி வருகிறது. இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் அடுத்த முயற்சிதான் ஹைப்பர்லூப் தொழில்நுட்பம். பாதுகாப்பான துரித போக்குவரத்தை உறுதி செய்கிறது இது.
வளர்ச்சி அடைந்த நாடுகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கும் தொழில் நுட்பங்களுக்கும் கோடிக்கணக்கில் செலவிட முடியும் என்ற நிலை இருந்தது. இந்த விஷயத்தில் இந்தியா பின்தங்கி தான் இருந்தது. இப்போது நிலைமை மாறிவிட்டது. ஆராய்ச்சிகளுக்காக பல ஆயிரம் கோடிகளை செலவழித்து வருகிறது. உலகம் முழுவதும் அமெரிக்கா, ஸ்விட்ஸர்லாந்து, கனடா போன்ற நாடுகளில் ஹைப்பர்லூப் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன.