கட்டுரை காஷ்மீர் : இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்

கட்டுரை

காஷ்மீர்: இந்திய ஜனநாயகத்துக்கு ஒரு சவால்

ஜி.கே. ராமசாமி

kashmir300இந்திய ஜனநாயகம் மனித உரிமைகளுக்குத் தரும் மரியாதையைத் தெரிந்துகொள்ளக் காஷ்மீர் சரியான உரைகல். ஜனநாயக அரசியல் அமைப்பின் மைய அம்சங்களில் ஒன்று அரசியல் சாசனம் உறுதியளித்துள்ள உரிமைகளை மக்கள் அனுபவிக்கும் நிலையில் அது செயல்பட வேண்டும். எனவே, அரசின் செயல்பாடுகள் சட்ட வரம்புக்குள் இருக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. இதனோடு தொடர்புடையதுதான் விமர்சனம். அரசின் செயல்பாடுகளைக் குடிமக்கள் விமர்சிப்பதென்பது ஆரோக்கியமான ஜனநாயகத்துக்கு அறிகுறி. இதற்கு மக்கள் தொடர்புச் சாதனங்களின் பங்கு அவசியமானதாகிவிடுகிறது. செய்திகளை மக்கள் முன்வைப்பதில் பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன.

இந்தப் புரிதலுடன் இந்திய ஜனநாயகத்தை, குறிப்பாக அது காஷ்மீர்ப் பிரச்சினையில் செயல்படும் விதத்தை, கவனிக்கும்போது, எவருக்கும் எழும் கேள்வி: இந்தியா ஜனநாயக நாடுதானா? காஷ்மீரில் சட்ட வரம்பை அதிகாரத்தின் தேவைகள்தாம் தீர்மானிக்கின்றன. இந்நிலையில் ஜனநாயக உரிமை என்பது கேலிக்கூத்தான விஷயமாகிறது. காஷ்மீரில் கடந்த அறுபது ஆண்டுகளாக இதுதான் நிலைமை. மிகப் பெரிய ஜனநாயகவாதி, மதச்சார்பற்றவர், சோஷலிஸ்ட் என உயர்வாகப் பேசப்படும் நேரு, காஷ்மீர் விஷயத்தில் கோர முகத்துடன் காட்சி தருகிறார். அவர் மட்டுமல்ல, இந்தியாவின் பத்திரிகைகளும் காஷ்மீர் விஷயத்தில் அரசாங்கத்தின் பிரச்சார பீரங்கிகளாக, தங்கள் ஜன நாயகப் பொறுப்பை முற்றாகத் துறந்து செயல்பட்டு வருவதையும் நாம் காணலாம்.

‘காஷ்மீரிகள் பாகிஸ்தானின் கைக்கூலிகள், மத அடிப்படைவாதிகள், ஆயுதமேந்திய பயங்கரவாதிகள், இந்தியாவில் முஸ்லிம் மதக் கலவரங்களுக்கு வித்திட்டு வருபவர்கள், பல்லாயிரக்கணக்கான இந்துக்களைக் கொன்றவர்கள், இந்திய ஒற்றுமையைச் சீர்குலைப்பவர்கள், இவர்களை நல்வழிப்படு஢த்த இந்திய அரசு கோடி கோடியாகச் செலவழிக்கிறது. ஆனால், இவர்கள் காட்டுவதெல்லாம் இந்திய விரோத மனோபாவம்தான்.’ இதுதான் ஊடகங்களின் ஒத்துழைப்புடன் இந்திய அரசு காஷ்மீர் மக்களைப் பற்றி ஏற்படுத்தியுள்ள பிம்பம்.

1987-kilarchi-03வரலாறும் அங்குள்ள உண்மை நிலையும் மேற்கூறிய கருத்துகளுடன் ஒத்துப்போகவில்லை என்பதுதான் சங்கடமான உண்மை. நம்மூர் ரோஜா திரைப்படம் காட்டிய பிம்பம்தான் என்ன? காஷ்மீரிகளின் உணர்வைக் கொச்சைப்படுத்துவதன் மூலம்தான் அது தேசப்பற்றைப் பெருமையாகப் பேசியது.

காஷ்மீர்ப் பிரச்சினையைப் புரிந்துகொள்ளக் காஷ்மீரிகளின் வரலாற்றைச் சுருக்கமாகவாவது தெரிந்துகொள்வது அவசியம். காஷ்மீரில் நடப்பது தேச விடுதலைப் போராட்டம். இது கடந்த 150 ஆண்டுகளாக நடந்துவருகிறது. ஜம்மு-காஷ்மீ஢ர் எனப்படும் இம்மாநிலம் மூன்று முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியது. அவை ஜம்மு, காஷ்மீர்ப் பள்ளத்தாக்கு, லடாக் பகுதிகள். இம்மாநிலத்தில் 12க்கும் அதிகமான மொழிகள் பேசப்படுகின்றன. எனினும், காஷ்மீரி, டோ க்ரி, பஹாரி, லடாக்கி, உருது ஆகியவை முக்கியமான மொழிகள். இங்கு இஸ்லாமியர்கள் 70%, அடுத்து இந்துக்கள் 25%. மீதமுள்ளவர்கள் புத்த மதத்தினரும் சீக்கியர்களும். புத்த மதத்தினர் லடாக் பகுதியில் மட்டுமே வசிக்கின்றனர்.

காஷ்மீர் ஜம்முப் பகுதியுடன் இணைந்தது 1846இல். அப்போது ஜம்மு, டோ க்ரா அரச குடும்பத்தின் ஆட்சியின் கீழ் இருந்தது. அதற்கு முன்பு காஷ்மீர், சீக்கிய அரசனான ரஞ்சித் சிங்கின் ஆட்சிக்குட்பட்டிருந்தது. ஆங்கிலேயர்கள் ரஞ்சித் சிங்கைத் தோற்கடித்துப் பஞ்சாப் பகுதியைக் கைப்பற்றினர். அப்போதைய டோ க்ரா அரசனான குலாப் சிங் ரஞ்சித் சிங்கைத் தோற்கடிக்க ரகசியமாக உதவியதால், ஆங்கிலேயர்கள் காஷ்மீரை ஜம்முவுடன் இணைத்து குலாப் சிங்கிடம் ஒப்படைத்தனர். குலாப் சிங்கால் அதற்கு ஒரு தொகையும் தரப்பட்டது. இந்து அரசனான குலாப் சிங்கின் நிர்வாகிகளில் 90%க்கும் மேல் இந்துக்கள். அவர்கள் காஷ்மீரிப் பிராமணர்களான பண்டிட்கள். காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் முஸ்லிம்கள் 90% பேர். அப்போது அவர்களுக்குப் படிப்பறிவு மிகவும் குறைவு. விவசாயமும் பிற சிறு கைத்தொழில்களும்தான் அவர்களின் பொருளாதாரச் செயல்பாடுகள். மதரீதியாக முஸ்லிம்கள் என்றாலும் இவர்களது இஸ்லாம் சூஃபிக்களால் பரப்பப்பட்டது. இவர்கள் முக்கியத்துவம் தந்தது பக்திக்கும் மிஸ்டிசிசத்துக்கும். மனிதநேயமும் பொறுமையும் இவர்களது சமூக நெறிகளை நிர்ணயித்தன. இந்தியப் பகுதியில் உள்ள பிற முஸ்லிம்களிடமிருந்து காஷ்மீர் முஸ்லிம்கள் வேறுபட்டவர்கள் என்பதை அவர்களோடு நேரில் கலந்து பழகியபோது எங்களால் உணர முடிந்தது.

karansinghடோ க்ரா வம்சத்தின் கொடூர ஆட்சிக்கான எதிர்ப்பு, இயக்கமானது 1931இல். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவரான ஷேக் அப்துல்லா போன்றவர்கள் எதிர்ப்பை இயக்கப்படுத்தினார்கள். 13 ஜூலை 1931இல் முப்பதுக்கும் மேற்பட்ட போராளிகளை குலாப் சிங்கின் போலீஸ் படை சுட்டுக் கொன்றது. அதனால், 1932இல் ‘ஜம்மு-காஷ்மீர் முஸ்லிம் மாநாடு’ என்னும் விடுதலைக்கான அமைப்பு உருவானது. அதன் நோக்கம், ஆங்காங்கே ஆட்சிக்கு எதிராக நடைபெற்றுவந்த நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதும் ஜனநாயக அரசமைப்பை நிறுவுவதுமாக இருந்தது. 1938இல், அதன் பெயரைத் ‘தேசிய மாநாடு’ என மாற்றினார்கள்.

காஷ்மீரிகளின் போராட்டம் அடிப்படையில் மதச் சார்பற்ற, ஜனநாயகக் காஷ்மீரை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. முஸ்லிம் மாநாட்டுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷேக் அப்துல்லா தன் முதல் உரையில், “காஷ்மீர் மக்களின் போராட்டம் இனவாதமல்ல என்பதை நாம் பலமுறை வலியுறுத்திவந்துள்ளோம். இந்தக் கட்சி பல இன மக்களின் குறைகளைப் பற்றிப் பேச உள்ள மேடை. இது சகக் குடிமக்களான இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் உதவத் தன்னைத் தயார்படுத்திக்கொண்டுள்ளது. பல இன மக்களும் ஒற்றுமையுடன் இருக்கும்போதுதான் முன்னேற்றம் சாத்தியமாகும். ஒற்றுமையான வாழ்க்கைக்கு மற்ற இனத்தவரின் நியாயமான உரிமைகளை மதிப்பது முக்கியத் தேவையாகும். மீண்டும் கூறுகிறேன், காஷ்மீரிகளின் போராட்டம் இனவாதப் போராட்டமல்ல” என்றார்.

முஸ்லிம் மாநாடு என்னும் பெயரைத் தேசிய மாநாடு என மாற்றக் காரணமாக இருந்தவர்கள் நேருவும் கவிஞர் இக்பாலும். எனவேதான், ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாடு எனப் பெயர் வந்தது. இங்குத் தேசம் என்பது காஷ்மீரிகளின் தேசம். முஸ்லிம் என்பதைவிடக் காஷ்மீரி என்னும் அடையாளத்தையே அவர்கள் விரும்புகின்றனர். காஷ்மீரி என்பது இந்தியர் என்பதைப் போன்று பல இன மக்களையும் உள்ளடக்கிய தேசிய அடையாளம். இது ஒரு வரலாற்றை, ஒரு பண்பாட்டை மையமாகக் கொண்ட அடையாளமாகும். இதைப் புரிந்துகொள்ளாமல் காஷ்மீர்ப் பிரச்சினையைப் புரிந்துகொள்ள இயலாது.

தேசிய மாநாட்டுக் கட்சிக்குப் பெருவாரியான மக்களின் ஆதரவு கிடைத்தது 1944இலிருந்து எனலாம். அக்கட்சி ‘புதிய காஷ்மீர்ப் பிரகடனம்’ (Naya Kashmiri Manifesto) என்பதை மக்கள் முன்பு வைத்தது. டோ க்ரா ராஜாவின் கொடூரமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த பிறகு அமைய இருந்த சமுதாயத்தில் பெண்கள், உழைக்கும் மக்கள், மற்றும் நலிவுற்றவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்; புரட்சிகரமான நிலச்சீர்திருத்தங்கள் மேற் கொள்ளப்படும் போன்றவற்றை முன்வைத்தது. 1951இல், ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஷேக் அப்துல்லா உண்மையிலேயே புரட்சிகரமான நிலச் சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார். அதுவே இந்தியாவில் ஏற்பட்ட உண்மையான முதல் நிலச் சீர்திருத்தம். ஜமீன்தார்களுக்கு எவ்விதமான நஷ்டஈடும் கொடுக்கப்படவில்லை.

காஷ்மீரி என்னும் அடையாளத்தை மதவாதிகள் எதிர்த்துவருகின்றனர். இவர்கள் அப்துல்லாவை எதிர்த்தனர். ஆனால், மதச் சார்பற்ற, முற்போக்குச் சிந்தனையும் கொண்ட அப்துல்லா காஷ்மீர் மக்களின் ஏகோபித்த தலைவராக உயர்ந்தார்.

1946இல், ‘டோ க்ரா ராஜாவே, காஷ்மீரை விட்டு வெளியேறு’ என்னும் போராட்டம் வெடித்தது. ‘சுதந்திரக் காஷ்மீர் எங்கள் பிறப்புரிமை’ என்னும் முழக்கம் தோன்றியது. தமது நேரடி ஆட்சியில் இருந்த பகுதிகளை ஆங்கிலேயர் 1947இல் இந்தியா-பாகிஸ்தான் என உருவாக்கிச் சுதந்திரம் வழங்கினர். அதே சமயம் ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டிலிருந்த 562 ராஜாக்களும் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ தங்கள் நிலப்பரப்பை இணைத்துக்கொள்ளவோ அல்லது தனித்திருக்கவோ அவரவர் விருப்பம்போல முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றனர் ஆங்கிலேயர். ஹைதராபாத் நிஜாமும் (முஸ்லிம்) காஷ்மீரின் ஹரி சிங்கும் (இந்து) தனித்திருக்க விரும்பினர்.

kashmir-11946இல் தொடங்கிய ஆயுதமேந்திய தெலுங்கானா உழவர்கள் போராட்டம் வேகமாகப் பரவிவந்தது. 3000க்கும் அதிகமான கிராமங்களைப் போராளிகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து ஜாகீர்தாரர்களின் (ஜமீன்தார்களின்) வசமிருந்த நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்தளித்தார்கள். இதனை எதிர்க்க முடியாத நிஜாம், பிறகு இந்தியாவுடன் இணைந்தார். இந்திய ராணுவம் சுதந்திர இந்தியாவில் தன் சொந்தக் குடிமக்கள்மேல் முதல்முறையாக ஏவிவிடப்பட்டது. 1948 செப்டம்பரில், இந்திய ராணுவம் நிஜாமின் எல்லைக்குள் நுழைந்து, பல ஆயிரக்கணக்கான போராளிகளைக் கொன்றது. ஐம்பதாயிரத்துக்கும் அதிகமானவர்களைக் கைதுசெய்து சிறையிலடைத்துச் சித்திரவதை செய்தது. கம்யூனிஸ்ட் கட்சியும் தடை செய்யப்பட்டது. 1951வரை நடந்த இந்த ராணுவ அடக்குமுறை நேருவின் ஜனநாயகப் பண்பை வெட்ட வெளிச்சமாக்கியது. இந்தியாவின் மையப்பகுதியில் பொதுவுடமை அரசு ஒன்று நிறுவப்பட்டால், அது இந்தியாவின் மிகப் பெரிய எதிர் சக்தியாக உருப் பெற்றுவிடும் என்பதை விரும்பாத நேரு, சுதந்திர இந்தியர்களின் மேல் ராணுவத்தை ஏவிவிட்டார்.

காஷ்மீரில் காட்சிகள் வேறுவிதமாக அமைந்தன. இந்து அரசனான ஹரி சிங் (தற்போதுள்ள கரண் சிங்கின் தந்தை) தன் ஆட்சியையும் பதவியையும் துறக்க மனமில்லாததால், முதலில் பாகிஸ்தானுடன் இணைந்துகொள்ளப் பேரம் பேசினார். தன் அரசப் பதவியையும் அதிகாரத்தையும் இழக்காத வகையில் அந்த இணைப்பு இருக்க வேண்டும் என்பதே அவரது நிபந்தனை. 1947 ஆகஸ்டில், பாகிஸ்தானுடன் அதற்கான ஒப்பந்தமும் செய்துகொண்டார். அரசனின் தொண்ணூறு சதவிகிதத்திற்கும் அதிகமான இந்து அதிகாரிகள் அதை எதிர்த்தனர். காஷ்மீர் சுதந்திர நாடாக இருப்பதே மேல் என்பது அவர்கள் நிலைப்பாடு.

அதே சமயம் அப்துல்லாவும் தேசிய மாநாட்டுக் கட்சியினரும் காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணைவதை எதிர்த்தனர். ஜின்னாவின் முஸ்லிம் லீக் கட்சி ஜமீன்தார்களின் கட்சி. அது காஷ்மீரிகளின் பண்பாட்டிற்கு ஒத்துவராது என்பது அப்துல்லாவின் கருத்து. காஷ்மீர் சுதந்திர நாடாக இருக்க வேண்டும் அல்லது இந்தியாவுடன் இணைய வேண்டும் என்பதே அவர்கள் நிலைப்பாடு. அப்துல்லாவுக்கு மக்களின் ஏகோபித்த ஆதரவு இருந்ததை நாம் கவனிக்க வேண்டும்.

அக்காலகட்டத்தில் இந்தியாவின் பல பாகங்களில் இன மோதல்கள் வெடித்தன. கூட்டம் கூட்டமாக இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியாவுக்குள்ளும் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குள்ளும் இடம்பெயர்ந்தனர். அந்தச் சூழலில், 1947 அக்டோ பரில், வடமேற்கு மாவட்டமான பூண்ச் (Poonch) பகுதியில் ஹரி சிங்கின் ஆட்சிக்கு எதிராகக் கலகம் எழுந்தது. மேற்குப் பஞ்சாபிலிருந்தும் எல்லைப்புற மாநிலங்களிலிருந்தும் இனக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்கள் ஜம்முப் பகுதிக்கு வந்து சேர்ந்திருந்த காலமது. அந்தச் சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அரசனின் காவல் துறை, ஆர்.எஸ்.எஸ்.ஸின் துணையுடன் அப்பகுதியிலிருந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொல்வதிலும் விரட்டியடிப்பதிலும் ஈடுபட்டது. 24 அக்டோ பர் 1947 அன்று, பூண்ச் கலகக்காரர்களுக்குத் துணைபுரிய வடமேற்கு எல்லைப்புறத்திலிருந்த பட்டாண்கள் ஜம்மு-காஷ்மீர் எல்லைக்குள் நுழைந்தனர். அவர்களில் ராணுவ வீரர்களும் இருந்தார்கள். பாகிஸ்தான் அரசு தேவையான தளவாடங்களையும் வாகனங்களையும் தந்துதவியது. அவர்கள் பாராமுல்லா நகரைக் கைப் பற்றி ஸ்ரீநகருக்குச் சமீபம்வரை வந்துவிட்டனர். அப்படி அவர்கள் முன்னேறி வந்தபோது, ஆயிரக்கணக்கான முஸ்லிம்களைக் கொன்றனர், முஸ்லிம் பெண்களைக் கற்பழித்தனர், சொத்துகளைச் சூறையாடினர்.

அப்படிப்பட்ட சூழலில், ஹரி சிங்கின் அதிகாரிகள் ஜம்முப் பகுதியிலிருந்து வெளியேறிவிட்டார்கள். நிர்வாகம் நிலைகுலைந்தது. அதற்குச் சில வாரங்களுக்கு முன்பு விடுதலை செய்யப்பட்ட அப்துல்லா, சரிந்து வந்த அரசு நிர்வாகத்தைச் சீராக்கினார். 26 அக்டோ பர் 1947 அன்று நிபந்தனையுடன் கூடிய இணைப்புச் சாசனத்தில் ஹரி சிங் கையெழுத்திட்டார். பாதுகாப்பு, அயலுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவற்றை இந்தியாவின் அதிகாரத்தின் கீழ் ஒப்படைப்பதாக ஒப்பந்தம் ஏற்பட்டது. அதை ஏற்ற இந்திய அரசு மறுநாள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘சட்டம், ஒழுங்கு சீரடைந்தவுடன், ஜம்மு-காஷ்மீர் மக்களின் சம்மதத்தை அறிந்து இந்தியாவுடனான இணைப்பு முடிவுசெய்யப்படும்’ என அறிவித்தது. இந்திய ராணுவம் வந்ததும் தேசிய மாநாட்டுத் தொண்டர்களின் உதவியுடன் பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தனர்.

kashmir-2அந்த இணைப்புச் சாசனத்தில் கையெழுத்திட்ட மவுன்ட்பேட்டனும் இணைப்பு நிரந்தரமாக்கப்பட வேண்டுமென்றால், அந்த மக்களின் சம்மதத்தையும் கேட்ட பின்னரே செய்ய வேண்டும் என்னும் நிபந்தனையோடு இணைப்பு தற்காலிகமானதுதான் என்ற நிலையில் அதனை ஏற்றார். 1947 நவம்பர் இரண்டாம் நாள் இந்திய வானொலியில் ஆற்றிய உரையிலும் ‘ஜம்மு-காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அம்மக்களே தீர்மானிப்பார்கள்’ என்று நேரு கூறினார். பின்பு, 31 டிசம்பர் 1947இல், ஐ.நா. சபைக்குக் கொடுத்த புகாரிலும் அந்த மாநில மக்களின் கருத்தை அறிய, ஐ.நா. சபையின் மேற்பார்வையில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என இந்திய அரசு உறுதியளித்தது. அந்த உறுதிமொழி இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

ஜனநாயகக் கொள்கையிலிருந்தும் பொறுப்பிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக நழுவிக்கொண்டு வந்ததைச் சாதுரியமாக இந்தியா நியாயப்படுத்திவருகிறது. அதாவது, காஷ்மீர் மக்களின் கருத்தைக் கேட்பது என்பதுதானே நிபந்தனை? 1951இல், வயதுவந்த எல்லாத் தரப்பினரும் கலந்துகொண்ட, அம்மாநிலத்தின் அரசியல் சாசனத்தைத் தயாரிப்பதற்கான குழுவைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலைச் சுட்டிக்காட்டி ஏதோ ஒருவகையில் மக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு நடந்ததாக இந்திய அரசு கூறிவருகிறது. அந்த வாக்கெடுப்பு ஐ.நா. சபையின் கண்காணிப்பில் நடக்கவில்லை; மேலும் அது இணைப்பு பற்றிய வாக்கெடுப்பும் அல்ல என்பதை ஒரு குறையாக இந்திய அரசு கருதவில்லை. அடுத்து 1953இல், பாகிஸ்தான் அமெரிக்கக் கூட்டணியுடன் இணைந்ததைச் சுட்டிக்காட்டி, பாகிஸ்தானின் அயலுறவுக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதால், காஷ்மீரில் உடனடியாக வாக்கெடுப்பு நடத்த முடியாது என்றது இந்திய அரசு. மேலும், 1957இல் காஷ்மீர் மாநிலத்தின் அங்கீகரிக்கப்பட்ட சட்டமன்றம் நிறைவேற்றிய, காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்னும் சட்டத்தையும் அது துணைக்கழைத்துப் பேசுகிறது. தான் செய்வது சட்டரீதியாகச் சரியெனக் காட்டிக் கொள்ளும் இந்தியா, தான் நியாயமாகக் காஷ்மீரை உரிமை கொண்டாட முடியாது என்பதை ஒப்புக் கொள்ள மறுக்கிறது.

இந்திய அரசியல் சாசனத்தின் 370ஆம் பிரிவின்படி, ஜம்மு-காஷ்மீருக்குத் தன்னாட்சி உரிமையும் சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்பட்டன. 1951இல், ஷேக் அப்துல்லா காஷ்மீரின் பிரதமர் ஆனார். அம்மாநிலத்தின் ஜனாதிபதியை (அப்போதைய ஆளுநர்) அதன் சட்டமன்றம் தான் தேர்வுசெய்ய வேண்டும். ஆனால், நேரு அப்துல்லாவை நிர்ப்பந்தித்து முப்பது வயதான கரண் சிங்கை (எந்த அரச வம்சத்தின் கொடூர ஆட்சியை எதிர்த்துக் காஷ்மீர் மக்கள் போராடினார்களோ அதன் வாரிசை) ஜனாதிபதியாக்கினார். 1952இல் அப்துல்லாவும் நேருவும் தில்லி ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொண்டார்கள். அது காஷ்மீரின் தன்னாட்சியை அங்கீகரித்தது.

1952-53இல், ஜம்மு பகுதியில் ‘பிரஜா பரிஷத்’ என்னும் இந்து அமைப்பு (ஆர்.எஸ்.எஸ்.ஸின் ஒரு பகுதி) அப்துல்லாவை எதிர்த்தது. அவரது மாநில சுயாட்சியை முழுமையாக நீக்க வேண்டும்; காஷ்மீர் முழுமையாக இந்தியாவின் ஒரு பகுதியாக வேண்டும் என முழக்கங்களுடன் போராட்டத்தில் அவ்வமைப்பு ஈடுபட்டது. அதில் தில்லியின் கைவரிசையும் இருந்ததாக ஷேக் அப்துல்லா சந்தேகித்தார். மதச்சார்பின்மை, ஜனநாயகம் எனப் பேசிய நேரு அவற்றில் முழு ஈடுபாடு கொண்டிருக்கவில்லை என்று எண்ணிய அப்துல்லா முழுச் சுதந்திரமே தங்கள் நோக்கம் என்று பொது மேடைகளில் பேசலானார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட நேரு, வெளிநாட்டுடன் ரகசியத் தொடர்புகொண்டு இந்தியாவின் ஒற்றுமையைச் சீர்குலைக்கிறார் எனக் கூறி ஷேக் அப்துல்லாவின் ஆட்சியை ஆகஸ்ட் 1953இல் கலைத்துவிட்டு அவரையும் சிறையிலடைத்தார். அப்துல்லா பதினெட்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

ஷேக் அப்துல்லாவின் ஆட்சியைக் கலைத்ததில் மூன்று பேர் முக்கியப் பங்காற்றினார்கள். பக்ஷி குலாம் முகமது, டி.பி. தர் (காஷ்மீர்ப் பண்டிட்டான இவர் ஷேக்கின் அமைச் சரவையில் உள்துறை அமைச்சராக இருந்தவர்), மற்றும் காஷ்மீரின் அப்போதைய ஜனாதிபதியான கரண் சிங். இவர்களுக்கு வேண்டிய எல்லா உதவிகளையும் நேருவின் அரசு அளித்துவந்தது. 1953 ஆகஸ்டில், பக்ஷி குலாம் முகமதின் அரசு அமைந்தது. அந்தப் பொம்மை அரசை வைத்துக்கொண்டு,தான் முன்பு ஒப்புக்கொண்ட, கொடுத்த உறுதி மொழிகளை டெல்லி அரசு படிப்படியாகக் கைவிட்டது.

1954இல் இந்திய அரசியல் சாசனச் சட்டம் ஒன்று ஜனாதிபதியால் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டம், ஜம்மு-காஷ்மீர் தொடர்பாக இந்திய அரசுக்குச் சட்டமியற்றும் அதிகாரத்தைத் தந்தது. பக்ஷி குலாம் முகமதின் அரசும் அதற்கு ஒப்புதலளித்தது. இதன்படி, இந்திய அரசியல் சாசனத்தின் பிரிவு 370 வெறும் காகிதப் புலியாயிற்று. 1957 ஜனவரி 26இல், குலாம் முகம்மதுவின் அரசு மற்றுமோர் அரசியல் சாசனச் சட்டத்தை மேற்கொண்டது. அதன்படி, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எப்போதும் இந்தியாவின் ஒரு பகுதியாகவே இருக்கும்.

1958இல் இன்னுமொரு சட்டம் ஜம்மு-காஷ்மீரை மத்திய நிர்வாகச் சேவையின் கண்காணிப்புக்குக் கீழ்க் கொண்டுவந்தது. 1964-65இல் இயற்றப்பட்ட சட்டத்தால், ஜம்மு-காஷ்மீரில் தேர்ந்தெடுக்கப்படும் அரசைக் கலைக்கும் அதிகாரத்தையும் மத்திய அரசு தனதாக்கிக்கொண்டது.

இப்படியாகக் காஷ்மீர் மக்கள் தங்கள் தேசத்தின் சுதந்திரத்திற்காக நடத்திய போராட்டத்தை, கிடைத்த சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக்கொண்டு நேருவின் அரசு முறியடித்தது. அம்மக்களின் நியாயமான கோரிக்கைகளைக் கொச்சைப்படுத்தி அவர்களை அவமதித்தது. இந்தச் சதியில் ஆர்.எஸ்.எஸ்.ஸும் பங்கேற்றது. கொஞ்சம் கொஞ்சமாக இந்தியாவின் சதியை உணர்ந்த காஷ்மீர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 70களிலும் 80களிலும் இந்திய அரசை எதிர்த்து ஊர்வலம், பொதுக்கூட்டம், பிரச்சாரம் என்னும் அளவிலேயே அப்போராட்டம் இருந்தது. ஆனால், இந்தியாவின் அடக்குமுறை, காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கும் வகையில் கடுமையாக இருந்தது.

இந்தியாவும் பாகிஸ்தானும் தங்களுக்கு இடையேயான பிரச்சினையில் காஷ்மீரைப் பயன்படுத்திக்கொள்கின்றன. காஷ்மீர்ப் பிரச்சினை தீர்க்கப்படுவதில் இரு நாடுகளுக்கும் அக்கறையில்லை. ஆனால், 1980களின் இறுதியில் காஷ்மீர் மக்களின் போராட்டம் ஆயுதமேந்திய போராட்டமாக உருவெடுத்தது. அதற்குப் பாகிஸ்தான் உதவியது. 1989 ஆகஸ்டில், தேசிய மாநாட்டுக் கட்சியின் ஊழியர் ஒருவர் சுடப்பட்டார். அதன் விளைவாக, அரசாங்கத்துக்கு ஆள்காட்டிகளாக இருந்த வேறு பல முஸ்லிம்களும் கொல்லப்பட்டனர். 1989 அக்டோ பரில் பா.ஜ.க.வின் மாநிலத் தலைவரும் அதற்கு இரண்டு மாதங்கள் கழித்து நீதிபதி ஒருவரும் கொலையுண்டார்கள். 1990 பிப்ரவரியில், தொலைக்காட்சி நிலைய இயக்குநர் கொல்லப்பட்டார். இப்படு கொலைகள் மத அடிப்படையிலானவையல்ல.

காஷ்மீர் மக்களின் தேச விடுதலைக்கான போராட்டத்தின் சுருக்கமான வரலாறு இது. காஷ்மீரி என்னும் அடையாளம் இந்துக்களையும் (பண்டிட்கள்) முஸ்லிம்களையும் சீக்கியர்களையும் ஒன்றிணைக்கிறது. ஆனால், இந்த மக்களை இந்தியப் பகுதியில் உள்ளவர்கள் இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் எனத் தனித்தனியாகப் பிரித்து மதவாத வர்ணத்தைப் பூசிக் கொச்சைப்படுத்துகின்றனர். இந்தியப் பத்திரிகைகளும் பிற ஊடகங்களும் இந்த வஞ்சகத்தை மூடிமறைக்கின்றன.

இன்று அங்குள்ள நிலைமை என்ன என்பதை அறியக் கர்நாடகாவின் மக்கள் ஜனநாயக மன்றத்தைச் (PDF) சேர்ந்த நான்கு பேர், ஆந்திராவின் மனித உரிமை அமைப்பைச் (HRF) சேர்ந்த இருவர், ஆந்திரப் பிரதேச சிவில் உரிமை மையத்தைச் சேர்ந்த இருவர், டெல்லியிலுள்ள வளரும் சமுதாயங்களின் ஆய்வு மையத்திலிருந்து (SDS) ஒருவர் மற்றும் இரண்டு பத்திரிகையாளர்கள் என 11 பேர் கொண்ட உண்மை அறியும் குழு மே 4ஆம் தேதி ஸ்ரீநகரை அடைந்தது. இந்தியாவில் நன்கு அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலரான டாக்டர் பாலகோபால் எங்கள் குழுவின் தலைவர். நாங்கள் அடுத்த 9 நாள்கள் ஸ்ரீநகரிலும் அதனைச் சுற்றி 50-60 கிமீ வட்டத்திலுள்ள கிராமங்கள் மற்றும் சிறிய நகரங்களுக்கும் நேரில் சென்று விவரங்களைச் சேகரித்தோம். ஸ்ரீநகரில் சையத் அலி ஷா கிலானி, இஸ்லாமிய மாணவர்கள், லீக் தலைவர்கள், வழக்கறிஞர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் (இதில் பண்டிட்களும் அடக்கம்), மற்றும் சில பேராசிரியர்கள் எனப் பலரைச் சந்தித்துப் பேசினோம். அந்தச் சந்திப்புகளிலிருந்து கிடைத்த செய்திகள், நாங்கள் பார்த்தவை, மற்றும் அனுபவித்தவற்றையே அங்குள்ள நிலைமையாக உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.

இரண்டு விஷயங்களை எங்களால் தெளிவாக உணர முடிந்தது. ஒன்று, ராணுவத்தினரின் அடக்குமுறையும் ஆட்சியும். இரண்டு, இந்தியாவையும் இந்தியாவைப் பற்றியும் காஷ்மீரிகளின் கருத்து. அங்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு உள்ளதென்றாலும் நிர்வாகத்தின் பிடி ராணுவத்தின் கையில்தான் என்பதை உணரலாம். இம்மாநிலத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கள் இரண்டு ராணுவக் கமாண்டர்கள் (15 corps மற்றும் 16 corps). காஷ்மீர்ப் பள்ளத்தாக்கின் ஜனத்தொகை 35 லட்சம். ஆனால், அங்கு 5 லட்சத்துக்கும் அதிகமான ராணுவ மற்றும் துணை ராணுவத்தினர் எங்கும் நிறைந்துள்ளனர். 50 மீட்டரிலிருந்து 100 மீட்டர் இடைவெளியில் இவர்கள் ஏகே47 துப்பாக்கிகளுடன் நின்றுகொண்டிருப்பது சர்வசாதாரணமான காட்சி. எங்களுக்குப் பயமெல்லாம் தீவிரவாதிகளைவிடத் துப்பாக்கி ஏந்தி ரோந்திலிருந்த இந்த ராணுவத்தினர்மீதுதான் அதிகமிருந்தது. இவர்களுக்குள்ள வரம்பற்ற அதிகாரத்தால் யாரையும் எப்போது வேண்டுமானாலும் எந்த வாரண்டும் இல்லாமல் கைதுசெய்யலாம், கொல்லலாம், மாயமாக மறைய வைக்கலாம். அதற்காக யாருக்கும் – இந்திய நாடாளுமன்றத்துக்குக்கூட – பதில் சொல்லத் தேவையில்லை. எல்லையற்ற இந்த அதிகாரத்தை அவர்கள் யார்மீது செலுத்தினாலும் அவர்கள் பயங்கரவாதிகள் என்று முத்திரைகுத்தப்படுவார்கள். எனவே, கொலை, கற்பழிப்பு, பணம் பறிப்பு போன்றவை மலிந்துள்ளன. கிராமப்புறங்களில் இவர்களது கெடுபிடிகள் சற்று அதிகம். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் வெளியில் செல்லும்போதும் திரும்பி வரும்போதும் சோதிக்கப்படுவார்கள். ராணுவத்தினரின் ஆணைப்படி நடக்கவில்லை என்றால், அந்தக் கிராமவாசிகளுக்கு ஆபத்து வந்துவிடும். பல இடங்களில் எங்கள் வாகனம் நிறுத்தப்பட்டு நாங்கள் விசாரிக்கப்பட்டோ ம். எங்கள் அடையாள அட்டைகள் சோதிக்கப்பட்டன. இந்தியாவிலிருந்து வந்தவர்கள் என்றவுடன் ராணுவத்தினருக்குச் சற்று நிதானம் வந்துவிடும். கடந்த 18 வருடங்களில் 80,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் 20,000 பேரைத் தீவிரவாதிகள் கொன்றனர். ராணுவம் கொன்றது 60,000 பேருக்கும் அதிகம்.

உண்மை அறியும் எங்கள் குழுவின் கவனம் பயங்கரவாதிகளாலும் ராணுவத்தினராலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதாக இருந்தது. அந்த நோக்கில், மே 6ஆம் தேதி ஸ்ரீநகரில் மஹராஜ் குன்ச் (Gunj) பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தைச் சந்தித்தோம். தாயையும் மூன்று பெண்களையும் ஒரு மகனையும்கொண்ட குடும்பம் அது. அன்றாடம் கூலி வேலை செய்து பிழைக்கிறார்கள். மகனின் சம்பாத்தியம் தாய்க்குக் கொஞ்சம் உதவுகிறது. மூன்று பெண்களும் படிக்கிறார்கள். ஒரு நாள் மாலையில் அந்த 16 வயது மகன் அங்குள்ள சைக்கிள் கடைக்குப் போனான். அப்போது ஆட்டோ வில் வந்த இருவரில் ஒருவன் அந்தப் பையன் தன்னிடமிருந்து அறுபத்து நான்காயிரம் ரூபாய் கடன் வாங்கியதாகவும் அதைத் திருப்பித் தரவில்லை என்றும் கூறி அந்தப் பையனை அருகிலிருந்த காவல் நிலையத்துக்கு இழுத்துச் சென்றான். அங்கே மேலும் இரண்டு குற்றங்கள் அந்தப் பையன் மேல் சுமத்தப்பட்டன. அன்று இரவு அவன் சிறையில். ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தால் அவனை விட்டுவிடுவதாக மறுநாள் பேரம் நடந்தது. அவ்வளவு பணம் தர அந்தத் தாயால் முடியவில்லை. அந்தப் பையன் இன்னமும் சிறையில். நாங்கள் அந்தப் பையனின் வக்கீலைச் சந்தித்தபோது அவர், ‘இது போன்ற பொய் வழக்குகள் நிறைய உண்டு. ஒரு வழக்கிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தால், உடனே வேறொரு வழக்கில் கைதுசெய்து சிறையில் அடைத்துவிடுவார்கள். கேட்கும் பணத்தைக் கொடுத்தால் தப்பிக்கலாம்’ என்றார். அந்தப் பையன்மீது குற்றம்சாட்டியவர்கள் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள்.

kashmir-4சற்று வேறுவிதமாக இன்னொரு வழக்கு. பாரா முல்லா மாவட்டத்தைச் சேர்ந்த பண்டிபோரா நகரத்திலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ள கிராமம் சும்லார். ஒரு நாள் பிற்பகல் அங்குள்ள ஒரு வீட்டைக் காவல் துறையினர் சோதனையிட்டார்கள். வீட்டிலிருந்தவர்கள் எல்லோரும் வெளியே நிறுத்தப்பட்டார்கள். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு அவர்கள் வீட்டுக்குள் போகலாம் எனச் சொல்லிவிட்டுக் காவல் துறையினர் வெளியேறினார்கள். அக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மகனையும் அவர்கள் அழைத்துச் சென்றது பிறகுதான் தெரியவந்தது. குடும்பத் தலைவர் அரசியல் பிரமுகர் ஒருவரது துணையுடன் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரித்தார். பையன் விசாரணைக்காக ராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது. இருவரும் அங்குச் சென்றார்கள். ஒரு தொகை கொடுத்தால், சிறுவனை அன்று மாலையே அனுப்பிவிடுவதாக ராணுவத்தினர் கூறினார்கள். அத்தொகையைப் பையனின் தந்தையால் திரட்ட முடியவில்லை. நான்கு நாள்களுக்குப் பிறகு மகனின் பிணம்தான் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நிறைய நடந்துள்ளன. ஆனால், சட்டபூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. ராணுவத்தினரின் அத்துமீறல்கள் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. அவை எல்லாவற்றையும் இங்கே சொல்ல முடியாது என்றாலும், ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றி நாம் தெரிந்துகொள்வது அவசியம். பாம்போர் (Pompore) நாற்பதாயிரத்துக்கும் அதிகமானவர்கள் வசிக்கும் சிறிய நகரம். ஸ்ரீநகரிலிருந்து 25 கிமீ தொலைவிலுள்ள இந்நகரம் குங்குமப்பூ உற்பத்தி மையம். இங்கு பாபா கிஷ்த் வாரி என்பவன் 1980களின் இறுதியில் அரிசி ஆலை ஒன்றில் இரவு நேரக் காவலாளியாக இருந்தவன். தீவிரவாதக் குழு ஒன்றுடன் அவன் சிறையிலடைக்கப்பட்டான். எதிர்ப் புரட்சிக்குப் பயன்படுபவனாக இவன் பின்னர் ராணுவப் பாதுகாப்புடன் வெளியில் வந்தான். அதன் பின்னர் ராணுவம் மற்றும் காவல் துறையின் துணையுடன் இவன் செய்த கற்பழிப்புகளும் கொலைகளும் 150க்கும் மேல். அவர்கள் எல்லோரும் முஸ்லிம்களே. பாம்போரில் மட்டும் இவன் 40க்கும் மேலான கொலைகளைச் செய்திருக்கிறான். அவற்றில் 25க்கும் அதிகமானவற்றுக்கு நேரடிச் சாட்சிகள் இருந்தும் இவன்மேல் இதுவரை எந்தக் குற்றமும் பதிவாகவில்லை. 90களின் தொடக்கத்தில் இரவுநேரக் காவலாளியாக இருந்த இவன் இன்று பல கோடிகளுக்கு அதிபதி. ராணுவத்தின் உதவியுடன் இவன் ஆள்களைக் கடத்திப் பணம் பறிக்கிறான். பணம் தராவிட்டால் அவர்களைக் கொலை செய்கிறான். இப்படி இவன் பறிக்கும் பணத்தின் ஒரு பகுதியை ராணுவத்தினருக்கும் காவல் துறை அதிகாரிகளுக்கும் கொடுத்துவருகிறான். இவனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களையும் சந்தித்தோம். எதிர்ப் புரட்சி என்னும் பெயரில் இவனைப் போன்று பலரை ராணுவமும் காவல் துறையும் இயக்கி வருகின்றன.

தீவிரவாதிகளைப் பிடிப்பதற்கு, உண்மையில் கொல்வதற்கு, ராணுவம் பொதுமக்களைப் பயன்படுத்தி வருகிறது. அதற்கு உதவ மறுத்தால் கொல்லப்படும் அச்சத்தினால், பொதுமக்கள் ராணுவத்தினரின் கட்டளைப்படி நடக்க வேண்டியுள்ளது. ராணுவத்தினர் பொதுமக்களை முதலில் தீவிரவாதிகள் பதுங்கியுள்ள இடங்களுக்குச் செல்லவைத்து, அவர்களைக் கேடயமாகப் பயன்படுத்தித் தீவிரவாதிகளைச் சுடுகிறார்கள். அப்போது ஏற்படும் மோதலில் கேடயமான அப்பாவிப் பொதுமக்களும் சுடப்படுவார்கள் என்பதுதான் சோகம். மறுநாள், இரண்டு தீவிரவாதிகளும் பொதுமக்களில் ஒருவரும் சுடப்பட்டார்கள் என்னும் செய்தி பத்திரிகைகளில் வெளியாகும். இப்படி இறந்தவர்கள் பலர். இவர்களது குடும்பங்களையும் சந்தித்துப் பேசினோம். பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தும் உரிமை மீறலை யாரும் தட்டிக்கேட்க முடியாது. காஷ்மீர் மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்களும் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாள் எங்களைச் சந்தித்துவிட்டு வீடு திரும்பிய தோடா (Doda) மாவட்டத்தைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் ஒருவர் மாலை ஏழு மணி சுமாருக்குப் பல வந்தமாக, சோனாவால் காவல் நிலையத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டு விசாரணை என்னும் பெயரில் தாக்கப்பட்டார். மறுநாள் காலை நாங்கள் அந்தக் காவல் நிலையத்துக்குச் சென்று அங்கிருந்த IPS அதிகாரி (தமிழர்) ஒருவரிடம் விசாரித்தபோது, அது தவறுதலாக நடந்த நிகழ்ச்சி என்று சமாளித்தார். அந்த மனித உரிமை ஆர்வலரும் விடுவிக்கப்பட்டார்.

எல்லையற்ற அதிகாரத்தைக் கொண்டுள்ள ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டுவரும் இன்னொரு தொழில் காட்டுமரக் கடத்தல். வாகனப் போக்குவரத்து இவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளதால் இந்தத் தொழில் நடத்துவது எளிதாகிவிட்டது. இது கூட்டுக்கொள்ளை.

காஷ்மீரில் ராணுவத்தின் அடக்குமுறை கொடூரமானதாகவும் ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகவும் அந்த மக்களை இந்தியாவிலிருந்து முற்றாக அந்நியப்படுத்துவதாகவும் நடைபெற்றுவருகிறது. அந்த மக்களைவிட அந்த மண்தான் முக்கியம் என இந்திய அரசு கருதுகிறது.

இந்தியர்களும் தாங்களும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்னும் காஷ்மீரிகளின் மனோபாவம்தான் அடுத்ததாக நாங்கள் கவனித்த முக்கியமான விஷயம். ஆந்திர, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த எங்களை அவர்கள் ‘நீங்கள் இந்தியர்கள்’ என்று குறிப்பிட்டார்கள். இந்தியர்கள் வேறு, காஷ்மீரிகள் வேறு என்னும் எண்ணம் காஷ்மீரின் எல்லாத் தரப்பு மக்களிடமும் வயதினரிடமும் வலுவாக உள்ளது. ‘இந்திய ராணுவம் அயல்நாட்டு ராணுவம். அது எங்கள் நாட்டை ஆக்கிரமித்து அடக்குமுறையில் ஈடுபட்டு வருகிறது’ என்னும் கருத்தே அவர்களிடம் காணப்படுகிறது. இந்தியாவின் மேல் அவர்களுக்கு வெறுப்பும் விரோத மனோபாவமும்தான். இந்திய ராணுவமும் காஷ்மீர் மக்களைச் சொந்த நாட்டு மக்களைப் போலல்லாமல் அடிமைகளைப் போல நடத்துகிறது. ஜனநாயகப் போர்வையில் கொஞ்சம் கொஞ்சமாக எதேச்சாதிகார அரசாக இந்தியா மாறிவருகிறதோ என்னும் கேள்வி எழுகிறது. இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த நிலைமை உள்ளது.

இவற்றோடு இன்னொரு தகவலையும் முன்வைக்க விரும்புகிறேன். ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் பா.ஜ.க.வினரும் தங்கள் முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரத்துக்காகக் காஷ்மீர்ப் பண்டிட்களின் மேல் நடத்தப்பட்ட தாக்குதல்களையும் அதனால் அவர்கள் காஷ்மீரிலிருந்து வெளியேறியதையும் இந்துக் கோயில்கள் தகர்க்கப்பட்டதையும் பற்றிப் பேசிவருகின்றனர். பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, ‘காஷ்மீரில் இந்துக்கள் தாக்கிக் கொல்லப்பட்டார்கள். அவர்களது கோயில்கள் தகர்க்கப்பட்டன. இந்த வெறிச் செயல்களை மதச்சார்பற்ற இந்தியர்கள் ஏன் பேச மறுக்கின்றனர்?’ என்னும் வாதத்தை இந்தப் பிராமணியவாதிகள் தங்கள் செயலை நியாயப்படுத்த முன்வைக்கின்றனர். இதில் உண்மையில்லை என்பதை 1993இல் டெல்லியைச் சேர்ந்த ஆங்கிலப் பத்திரிகைக் குழு ஒன்று அம்பலப்படுத்தியது. ஆனால், இந்திய ஊடகங்களில் பேரளவில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் அதை இருட்டடிப்புச் செய்தனர். தகர்க்கப்பட்டதாகக் கூறப்பட்ட கோயில்களைப் பற்றிய விவரங்களைப் பெரும் சிரமப்பட்டுப் பா.ஜ.க.விடமிருந்தே பெற்றுக்கொண்டு, அந்தப் பத்திரிகைக் குழு பிப்ரவரி 1993இல் அனந்த்நாக் பகுதிக்குச் சென்றது. இடிக்கப்பட்டதாக பா.ஜ.க. கூறிய 23 கோயில்களில் 21 கோயில்கள் எவ்விதச் சேதமோ அச்சுறுத்தலோ இன்றி இருந்ததை அந்தக் கோயில் பூசாரிகளிடமிருந்தே தெரிந்துகொண்டது. அவற்றைப் புகைப்படமெடுத்தும் வந்தது.

நாங்கள் சென்ற பல ஊர்களில் காஷ்மீரி பண்டிட்கள் வசித்ததையும் சின்னக் கோயில்கள் அங்குக் காவிக் கொடிகளுடன் இருந்ததையும் கண்டோ ம். ஸ்ரீநகரிலிருந்து சிறிய நகரமான ஷோபியனுக்குச் செல்லும் வழியில் பண்டிட்கள் வசித்த பல கிராமங்கள் காலிசெய்யப்பட்டிருந்ததையும் கண்டோ ம். நாங்கள் சந்தித்த தொழிற்சங்கவாதிகளில் (New Trade Union Initiative) பலர் பண்டிட்கள். 1989இலிருந்து காஷ்மீரிகளின் விடுதலை இயக்கம் ஆயுதமேந்திய போராட்டமாக மாறியது. பண்டிட்கள் பலர் ராணுவத்தின் ஆள்காட்டிகளானார்கள். அந்த ஆள்காட்டி வேலையில் முஸ்லிம்களும் ஈடுபட்டார்கள். போராளிகள் மத வேறுபாடின்றி ஆள்காட்டிகளைச் சுட்டுக் கொன்றார்கள். அதேசமயம் 1990இன் தொடக்கத்தில், இம்மாநிலத்தின் ஆளுநராக இருந்த ஜக்மோகன் ஏராளமான பண்டிட்களை அச்சுறுத்தியும் தூண்டிவிட்டும்஢ வெளியேறுவதற்கு வேண்டிய வசதிகளைச் செய்துகொடுத்தும் அகதிகளாக்கினார். ஆர்.எஸ்.எஸ். காரரான ஜக்மோகன் தேச விடுதலைப் போராட்டத்தை மதவாதப் போராட்டமாகச் சித்தரிக்க மைய அரசின் துணையுடன் அச்செயலில் ஈடுபட்டார். காஷ்மீரில் இன்றும் பண்டிட்களும் முஸ்லிம்களும் நேச உணர்வுடன் உள்ளனர் என்பதையும் நாங்கள் சந்தித்தவர்கள் தெரிவித்தார்கள். காஷ்மீரிகளின் வரலாற்றில் இந்து-முஸ்லிம் உறவு மேலோங்கியிருப்பதையும் பல சான்றுகளுடன் அவர்கள் விளக்கினார்கள். 1947இல் இந்தியாவின் பல பாகங்களில் இனக் கலவரம் நடந்தது. ஆனால், காஷ்மீரில் அப்படி எதுவும் நடக்கவில்லை. காஷ்மீரில் மாட்டிறைச்சி விரும்பி உண்ணப்படும் உணவல்ல என்பதையும் நாம் அறியவேண்டும். ஆனால், இன்று மதவாதச் சக்திகள் மாட்டிறைச்சி உண்பதை ஊக்குவிக்கின்றன.

மேற்கூறியவற்றிலிருந்து, முடிவாகக் கீழ்க்காண்பவற்றைத் தொகுத்துக் கூறலாம்.

காஷ்மீர்ப் பிரச்சினை மேலும் மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது. இந்திய அரசு இப்பிரச்சினையில் ஏன் இப்படிச் செயல்படுகிறது? காஷ்மீர்ப் பிரச்சினை தனக்கு அவமானமென்பதையே உணராமல், தன் தார்மீகக் கடமையைக் கைவிட்டு அம்மணமாக நிற்கிறது இந்திய அரசு. அதன் அணுகல் 1947இலிருந்தே பெரும்பாலும் பிராமணர்களையே உள்ளடக்கிய காஷ்மீரி இந்துக்களுக்கு முக்கியத்துவம் தருவதாகவே உள்ளது. அன்றிலிருந்தே காஷ்மீர் நிர்வாகத்தில் 90% அதிகமாகப் பிராமணர்கள் இருந்துவருகின்றனர். இந்திய அதிகார வர்க்கத்திலும் (1950-60களில்) 80% அதிகம் பிராமணர்கள் அங்கம் வகித்தனர். ஒட்டு மொத்த இந்தியாவிலும் 5% சதமே உள்ள பிராமணர்களின் அதிகாரம் இந்துத்துவ அரசியல் சக்தியாகச் செயல்பட்டுவந்தது, வருகிறது எனலாம். மேலும், இந்திய அரசும் பல பத்திரிகைகளும் முன்வைக்கும் வாதம் இதுதான்: ‘இப்போது ஆண்டொன்றுக்கு 6000 கோடி ரூபாய் செலவிடப்பட்டு ராணுவம் காஷ்மீர் மண்ணைக் காப்பாற்றிவருகிறது. நம் நாட்டுப் பாதுகாப்பிற்குக் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்பது அவசியம்.’ இது அர்த்தமற்ற வாதம் எனத் தோன்றுகிறது. இன்று ஒரு நாட்டுக்கு அண்டை நாட்டிலிருந்து ஆபத்து வர வேண்டியதில்லை. எங்கோ இருக்கும் அமெரிக்கா அப்பட்டமான பொய் சொல்லி ஈராக்கையே சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த நிலையில், காஷ்மீர் நம்முடன் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நமக்கு ஆபத்து வருவது ஏகாதிபத்திய நாடுகளிடமிருந்துதான். எனவே, காஷ்மீரிகளின் சுயமரியாதையை மதிக்கும் ஒரு ஜனநாயக அமைப்பு நமக்குத் தேவைப்படுகிறது. நம்முடைய சுயமரியாதையும் அதில் அடங்கியிருக்கிறது.

குறிப்புகள்

1. மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கில் செயல்பட்டுவரும் People’s Democratic Forum 1993இல் பெங்களூரில் தொடங்கப்பட்டது. இனவாதத்தை எதிர்த்தும் காவல் துறையாலும் ஆதிக்கச் சக்திகளாலும் மேற்கொள்ளப்படும் அத்துமீறல்கள் தொடர்பான ஆய்வறிக்கைகளை வெளியிட்டும் இந்நோக்கங்களைக் கொண்ட மற்ற அமைப்புகளுடன் இணைந்தும் இவ்வமைப்பு செயல்பட்டுவருகிறது. இதைச் சேர்ந்த பேரா. ஜி.கே. ராமசாமி, பேரா. பாபையா, பேரா. ஸ்ரீதர், மற்றும் கல்லூரி மாணவர் சேத்தன் ஆகியோர் காஷ்மீர் சென்ற உண்மைறியும் குழுவில் இடம்பெற்றனர்.

2. ஹைதராபாதிலிருந்து இயங்கிவரும் Human Rights Forum ஆந்திராவில் நடைபெற்றுவரும் போலி மோதல்களை ஆராய்ந்து உண்மை நிலையை வெளிக்கொணர்ந்தது. இதன் முயற்சியால் தேசிய மனித உரிமை ஆணையம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இந்த அமைப்பைச் சேர்ந்த டாக்டர் கே. பாலகோபாலும் போராசிரியர் ராமையாவும் உண்மையறியச் சென்ற இக் குழுவில் இடம்பெற்றனர். டாக்டர் பாலகோபால் வாரங்கல்லில் உள்ள பல்கலைக்கழகத்தில் கணிதப் பேராசிரியராகப் பணியாற்றிவந்தார். மனித உரிமைப் பாதுகாப்பு நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டுச் சட்டம் பயின்று, இன்று ஆந்திரப் பிரதேச உயர்நீதிமன்றத்தில் சட்டநுணுக்கங்களை நன்கறிந்த திறமையான வழக்கறிஞர் எனப் பெயர் பெற்றுள்ளார்.

3. டெல்லியிலுள்ள Centre for Study of Developing Societies (CSDS)ஐச் சேர்ந்த டாக்டர் பெலா பாட்டியா இக்குழுவில் இடம் பெற்றார். சத்தீஸ்கர் மாநிலத்தில் சட்ட வரம்புகளை மீறி பா.ஜ.க. மாநில அரசும் மைய அரசும் சல்வா ஜூடும் என்னும் பெயரில் நடத்தும் மனித உரிமை மீறல்களை இரண்டு முறை அங்குச் சென்று கள ஆய்வு செய்தவர் பாட்டியா. புத்த மதத்தவரான பாட்டியா பீகாரில் நடக்கும் மாவோயிஸ்டுகளின் போராட்டத்தைப் பற்றி முனைவர் பட்டத்துக்காக ஆராய்ந்தார்.

Bharathi-book-advt4. திரு. கிருஷ்ணா விசாகப்பட்டினத்தையும் திரு. ராமமோகன் ஹைதராபாதையும் மையமாகக் கொண்டு செயல்படும் பத்திரிகையாளர்கள்.

5. 1980களின் தொடக்கத்தில் பெங்களூரிலிருந்து வெளிவந்துகொண்டிருந்த ‘படிகள்’ இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தவர் ஜி. கே. ராமசாமி. படிகளின் முயற்சியால் 1980இல் தமிழ்ச் சிறுபத்திரிகைகள் இணைந்து செயல்பட்ட ‘இலக்கு’ என்னும் கலாச்சார அமைப்பு தொடங்கப்பட்டது. நாமக்கல்லுக்கு அருகிலுள்ள, ராமசாமியின் சொந்த ஊரான காந்தி புரத்தில், 60க்கும் அதிகமான சிறுபத்திரிகையாளர்கள் பங்குகொண்ட இரண்டு நாள் விவாதங்களுக்குப் பின் இலக்கு அமைப்பு தொடங்கப்பட்டது. கல்லூரிப் பேராசிரியராக உள்ள ராமசாமி People’s Democratic Forumஇல் கடந்த ஐந்து ஆண்டுகளாகச் செயல்பட்டுவருகிறார்.

 

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *