திருமலை: ஆந்திராவின் ஒரு பள்ளியில் கல்வியில் பின்தங்கிய மாணவர்களை அடிக்காமல் தலைமை ஆசிரியர் தனக்குத்தானே தோப்புக்கரணம் போட்டு தண்டனை கொடுத்து கொண்டார். அந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலம், விஜயநகர மாவட்டம், போப்பிலி மண்டலத்தில் பென்டா ஜில்லா பரிஷத் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். தலைமை ஆசிரியராக ரமணா என்பவர் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், நடப்பு கல்வியாண்டில் பள்ளி மாணவர்கள் கல்வியில் பின்தங்கி உள்ளனர். இதுகுறித்து தனது கவலையை வெளிப்படுத்திய தலைமை ஆசிரியர் ரமணா, ‘ஆசிரியர்களால் உங்களை அடிக்க முடியாது, திட்ட முடியாது, எதுவும் செய்ய முடியாது’ என மாணவர்களிடம் கூறினார். மேலும், கல்வியில் பின் தங்கிய மாணவர்களைத் தண்டிக்காமல், தனக்கு தானே தோப்புகரணம் போட்டு கொண்டு தண்டனை அளித்து கொண்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூகவளைதளத்தில் வெளியாகி வைரலாக பரவியது.
இதனை பார்த்த கல்வித்துறை அமைச்சர் நாரா லோகேஷ் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நமது அரசுப் பள்ளி ஆசிரியரின் வீடியோ பார்த்தேன். பள்ளி குழந்தைகளை ஊக்குவித்தால் பல சாதனைகளை செய்வார்கள். அவர்களை தண்டிக்காமல் புரிந்து கொள்ளும் உங்கள் சுய ஒழுக்கமான அணுகுமுறை நல்ல யோசனை, வாழ்த்துக்கள். அனைவரும் சேர்ந்து கல்வித் தரத்தை உயர்த்துவோம். நம் குழந்தைகளின் கல்வி, உடல் மற்றும் மன வளர்ச்சிக்கு உழைத்து, அவர்களின் பொன்னான எதிர்காலத்திற்கு வழி வகுப்போம்’ என கூறினார்.
The post கல்வியில் பின்தங்கிய மாணவர்களை அடிக்காமல் தனக்குத்தானே தோப்புக்கரணம் போட்ட தலைமை ஆசிரியர்: இணையத்தில் வீடியோ வைரல் appeared first on Dinakaran.