வாரணாசி: வாரணாசியில் நடைபெற்று வரும் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் கலந்து கொண்டார். அவருடன் 45 நாடுகளுக்கும் மேற்பட்ட தூதரக அதிகாரிகள் வந்திருந்தனர். வாரணாசி இந்து பல்கலையில் உள்ள பண்டிட் ஓம்கார்நாத் தாகூர் ஆடிட்டோரியத்தில், தூதரக அதிகாரிகள் உடனான கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் வாரணாசி பல்கலைக்கழக துணைவேந்தர் சஞ்சய் குமார் கலந்து கொண்டார். கலந்துரையாடல் நிகழ்வில் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: மிகப் பழமையான நகரான காசிக்கு நாடு முழுவதும் கலாச்சார ஈர்ப்பு உள்ளது.
இதுபோல் தமிழகத்துக்கு காசியுடன் கலாச்சார ஈர்ப்பும் உறவும் உள்ளது. இதனால் தான் காசியில் தமிழ் சங்கமம் நடத்த பிரதமர் முடிவு செய்தார் என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற பூடான், கொலம்பியா, ஈராக், ஜமைக்கா, உகாண்டா உள்ளிட்ட நாடுகளின் தூதரக அதிகாரிகள் தமிழ்ச் சங்கமம் மற்றும் இந்தியாவின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை குறித்து தங்கள் கருத்துகளையும் வியப்பையும் வெளிப்படுத்தினர். தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுவது போல், ராமேஸ்வரத்தில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுமா என்று கேட்டதற்கு ஜெய்சங்கர் இதுகுறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று பதிலளித்தார்.
The post காசியை போல் தமிழகத்தில் ராமேஸ்வரத்தில் தமிழ் சங்கமம் நடத்த பிரதமருக்கு பரிந்துரை: ஒன்றிய அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி appeared first on Dinakaran.