டெல்லி: காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக டெல்லியில் உள்ள இலங்கைத் தூதரை வரவழைத்து ஒன்றிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. எந்த சூழலிலும் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை ஏற்க முடியாது என ஒன்றிய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
எல்லை தாண்டி வந்ததாக கூறி நாகை, மயிலாடுதுறை, காரைக்காலை சேர்ந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் இன்று துப்பாக்கி சூடு நடத்தி கைது செய்தனர். துப்பாக்கியால் சுட்டபோது கடலில் குதித்ததில் 2 பேர் காயமடைந்தனர். எல்லை தாண்டி வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது தொடர் கதையாக உள்ளது. கடந்த 25ம் தேதி ஒரே நாளில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 34 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்வேல்(46). இவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கிளிஞ்சல்மேட்டை சேர்ந்த மாணிக்கவேல்(39), தினேஷ்(30), கார்த்திகேசன்(27), செந்தமிழ்(27), பட்டினச்சேரியை சேர்ந்த மய்விழிநாதன்(22), வெற்றிவேல்(28), மயிலாடுதுறை மாவட்டம் சந்திரபாடியை சேர்ந்த நவேந்து(34), வானகிரியை சேர்ந்த ராஜேந்திரன்(36), ராம்கி(30), நாகை மாவட்டம் நம்பியார் நகரை சேர்ந்த சசிகுமார்(26), நந்தகுமார்(30), பாபு(31), குமரன்(28) ஆகிய 13 மீனவர்கள் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இன்று அதிகாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கு கடலில் வலைகளை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் விசைப்படகை சுற்றி வளைத்தனர். பின்னர் எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அச்சமடைந்த 2 மீனவர்கள் விசைப்படகில் இருந்து கடலில் குதித்தனர். இதில் ஒரு மீனவருக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்றொரு மீனவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் துப்பாக்கி முனையில் படகில் இருந்த 11 மீனவர்கள் மற்றும் கடலில் தத்தளித்த 2 மீனவர்களையும் மீட்டு கைது செய்தனர். இதையடுத்து 13 பேரையும் யாழ்ப்பாணம் கடற்கரைக்கு அழைத்து சென்று மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. மேலும் காயமடைந்த 2 மீனவர்களும் சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் அடுத்த ஜாப்னா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மீனவர்களை இலங்கைக்கான இந்திய துணைத் தூதர் நேரில் சந்தித்து துப்பாக்கிச்சூடு பற்றி கேட்டறிந்ததாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
The post காரைக்கால் மீனவர்கள் மீதான துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இலங்கைக்கு ஒன்றிய அரசு கடும் கண்டனம் appeared first on Dinakaran.