அவந்திபோரா: ஜம்மு காஷ்மீரில் 2 தனித்தனி சம்பவங்களில் 6 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை பாதுகாப்புப் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த 3 நாட்களில் 6 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.இதுபற்றி ஜம்மு காஷ்மீர் போலீஸ் ஐஜி வி.கே.பிர்தி, ராணுவத்தின் விக்டர் போர்ஸ் படையின் தலைவர் மேஜர் ஜெனரல் தனஞ்செய் ஜோஷி ஆகியோர் நேற்று பேட்டியளித்தனர். அப்போது வி.கே. பிர்தி கூறுகையில்,‘‘ கடந்த ஒன்றரை மாதத்தில் காஷ்மீரில் நிலைமையை கண்காணித்த பிறகு தீவிரவாதிகளுக்கு எதிரான வேட்டை தொடர்பான உத்தியை மாற்றி அமைத்துள்ளோம்.
கடந்த 3 நாட்களில் தெற்கு காஷ்மீரில் உள்ள ஷோபியன் மற்றும் புல்வாமாவில் உள்ள நாதர் டிரால் ஆகிய பகுதிகளில் நடந்த தனித்தனி என்கவுன்டர்களில் 6 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் ஒருங்கிணைந்து செயல்பட்டதால் இந்த நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்தது’’ என்றார். மேஜர் ஜெனரல் ஜோஷி கூறுகையில்,‘‘பஹல்காம் தாக்குதலுக்கு பின்னர் மலை பகுதிகளுக்கு தீவிரவாதிகள் சென்றுள்ளதாக தகவல் கிடைத்தது. இதை மனதில் வைத்து மலை பகுதிகள், அடர்ந்த காட்டு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் ரோந்து சுற்றி வந்தனர். தீவிரவாதிகளை எங்கு கண்டாலும் அவர்கள் பாதுகாப்பு வீரர்களால் சுட்டு கொல்லப்படுவார்கள்’’ என்றார்.
The post காஷ்மீரில் 6 தீவிரவாதிகள் சுட்டு கொலை appeared first on Dinakaran.