ஸ்ரீநகர்: தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். காஷ்மீரின் முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நேற்று பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை குறி வைத்து திடீர் தாக்குதல் நடத்தினார்கள். நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில் இருந்து பல பயங்கரவாதிகள் துப்பாக்கிகளுடன் அங்கு இறங்கி வந்தனர். அவர்கள், அங்கு கூட்டமாக நின்ற சுற்றுலாப் பயணிகளை நோக்கி கண்மூடித்தனமாக சுட்டனர். இதில் 28 பேர் உயிரிழந்தனர். 12 க்கும் மேற்பட்டோர் பஹல்காம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தங்கள் குடும்பத்தினர் குண்டு காயங்களுடன் தரையில் சரிந்து விழுந்ததைப் பார்த்து உடன் வந்தவர்கள் கதறி அழுதனர். பயங்கரவாதிகளைப் பார்த்ததும் சுற்றுலா வழிகாட்டிகளும், குதிரைகளை சவாரிக்கு கொண்டு வந்த உள்ளூர்காரர்களும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். தகவலறிந்ததும் ராணுவம், மத்திய ஆயுதப்படை மற்றும் போலீசார் சம்பவ இடம் நோக்கி விரைந்தனர். அவர்கள் பயங்கரவாதிகளுக்கு எதிராக என்கவுன்ட்டர் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது பயங்கரவாதிகளை பிடிக்க டிரோன்கள், மோப்ப நாய்கள் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அஞ்சலி செலுத்தினார். ஸ்ரீநகரில் வைக்கப்பட்டுள்ள அவர்களின் உடல்களுக்கு அமித்ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து நண்பகல் 12 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. பிரதமர் இல்லத்தில் நடக்கும் கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதல் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளால் கூட்டநெரிசல் காணப்படுகிறது. பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடந்ததை அடுத்து மெவேராவில் இருந்து சுற்றுலா பயணிகள் ஸ்ரீநகர் திரும்புகின்றனர். ஸ்ரீநகரில் இருந்து டெல்லி, மும்பைக்கு 4 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகின்றன.
The post காஷ்மீர் தீவிரவாத தாக்குதல்.. உயிரிழந்தவர்கள் உடலுக்கு அமைச்சர் அமித் ஷா அஞ்சலி: நண்பகல் 12 மணிக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டம்!! appeared first on Dinakaran.