டெல்லி: ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும். சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை ஆற்றியவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி, 2025ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை ஒன்றிய அரசு கடந்த ஜன. 25ம் தேதி வெளியிட்டது. அதன்படி நடப்பாண்டில் 7 பேர் பத்ம விபூஷண் விருதுக்கும், 19 பேர் பத்ம பூஷண் விருதுக்கும், 113 பேர் பத்மஸ்ரீ விருதுக்கும் தேர்வாகியுள்ளனர்.
தமிழ்நாட்டில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா, தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருதும், கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், பாரதி ஆய்வாளர் சீனி விஸ்வநாதன் உள்பட 10 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் என மொத்தம் 13 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்றது. இதில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷண் விருது குடியரசு தலைவர் திரௌபதி முர்முவால் வழங்கப்பட்டது. குடும்பத்துடன் சென்று பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டார்.
கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின்(பத்மஸ்ரீ), நந்தமுரி பாலகிருஷ்ணா(பத்ம பூஷன்), அரிஜித் சிங்(பத்மஸ்ரீ), சமையல் கலைஞர் தாமு(பத்மஸ்ரீ) உள்ளிட்ட பிரபலங்கள் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் விருதுகளைப் பெற்றனர். இந்தாண்டு, 23 பெண்கள், 10 வெளிநாட்டவர்கள் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 113 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டது.
The post கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், நடிகர் அஜித் குமார் உட்பட 113 பேருக்கு பத்ம விருது: ஜனாதிபதி வழங்கினார் appeared first on Dinakaran.