ஊட்டி : நீலகிரி மக்களின் முக்கிய தொழிலாக தேயிலை விவசாயம் உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பசுந்தேயிலைக்கு உரிய கொள்முதல் விலை இல்லை. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மாற்று விவசாயமாக தங்களுக்கு சொந்தமான நிலங்களில் கார்னேசன் எனப்படும் கொய்மலர் சாகுபடி, காளான் சாகுபடி, ஸ்ட்ராபெர்ரி பழ சாகுபடி, மலைக்காய்கறிகள் சாகுபடி மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த சைனீஸ் காய்கறிகளை பயிரிட்டு கணிசமான லாபம் ஈட்டி வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் சுற்று வட்டார பகுதிகளான கொலக்கம்பை, தூதூர்மட்டம், டெராமியா கெரடாலீஸ், சட்டன், கிளிஞ்சடா, சின்ன கரும்பாலம், கேத்தி பாலாடா மற்றும் கோத்தகிரி, கட்டபெட்டு உள்ளிட்ட பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் பந்தல் அமைத்து சௌசௌ எனப்படும் மேரக்காய் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேரக்காய், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் மொத்த காய்கறி மண்டிகளுக்கு எடுத்து செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
குளிர்ச்சி தர கூடிய இக்காய்கறிக்கு சமவெளி பகுதிகளில் நல்ல கிராக்கி உள்ளது. உறைபனி காலமான ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் மேரக்காய் பந்தல்கள் கருகி விளைச்சல் பாதிக்கும். மற்ற காலங்களில் தொடர்ச்சியாக நல்ல விளைச்சல் இருக்கும். தற்போது மழை குறைந்துள்ள நிலையில் இதமான காலநிலை வருவதால் மேரக்காய் விவசாயம் அமைந்துள்ளது. பந்தல் அமைத்து அவற்றை பராமரிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் மட்டுமே மேரக்காய் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால் கிலோவுக்கு ரூ.20க்கும் மேல் நல்ல விலை கிடைத்து வந்தது. இங்கிருந்து மேரகாய் வாங்கி சென்ற விவசாயிகள் அவற்றை விதை எடுத்து கூடலூர் பகுதிகளிலும், கர்நாடகாவின் மைசூர் பகுதிகளிலும் தற்போது விவசாயம் செய்கின்றனர். இதனால் விலை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது’’ என்றனர்.
The post குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் பந்தல் அமைத்து மேரக்காய் விவசாய பணிகள் தீவிரம் appeared first on Dinakaran.