புதுடெல்லி: கங்கை, பிரம்மபுத்திரா, சிந்து நதிப் படுகைகளில் குறைவான பனிப்பொழிவு காரணமாக நீர்வரத்து குறைந்து வருகிறது.
நேபாள தலைநகர் காத்மாண்டுவை தலைமையிடமாகக் கொண்ட ஒருங்கிணைந்த மலைகள் வளர்ச்சிக்கான சர்வதேச மையம் (ஐசிஐஎம்ஓடி) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்து குஷ் இமயமலை முழுவதும் பனிப்பொழிவு 2 தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு இயல்பைவிட 23.6 சதவீதம் குறைவாக உள்ளது. இதனால் நீர்வரத்து குறைந்து வருகிறது. இதன்மூலம் 12 முக்கிய நதிப் படுகை பகுதியில் வசிக்கும் 200 கோடி மக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகும். தொடர்ந்து 3-வது ஆண்டாக இப்பகுதியில் பனிப்பொழிவு இயல்பைவிட குறைவாக பதிவாகி வருகிறது.