திருவனந்தபுரம்: மகாராஷ்டிரா மாநிலம் பன்வேலில் இருந்து கர்நாடகா, கேரளா வழியாக கன்னியாகுமரி வரை 1640 கிமீ தொலைவுக்கு தேசிய நெடுஞ்சாலை 66 அமைக்கப்பட்டு வருகிறது. இது 6 வழிச்சாலையாகும். கேரளாவில் இப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் மலப்புரம் மாவட்டம் கூரியாடு பகுதியில் சுமார் 50 அடி உயரத்தில் அமைக்கப்பட்டிருந்த நெடுஞ்சாலை திடீரென சரிந்து விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் அந்த வழியாக காரில் சென்று கொண்டிருந்த 4 பேர் காயமடைந்தனர். மேலும் இப்பகுதியில் சர்வீஸ் சாலையில் விரிசல் ஏற்பட்டது. இதேபோல் கோழிக்கோடு, காசர்கோடு உள்ளிட்ட பகுதிகளிலும் ரோட்டில் விரிசல்கள் ஏற்பட்டன. இந்நிலையில் கொச்சியிலுள்ள சாலைப் பணிகள் குறித்த ஒரு வழக்கு விசாரணையின் போது நீதிபதி தேவன் ராமச்சந்திரன் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விரிசல்கள் குறித்து கவலை தெரிவித்தது. இதுகுறித்து நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறியது:
தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் தொடர்பாக வரும் தகவல்கள் மிகவும் கவலையளிக்கிறது. இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவில் விசாரணை நடத்தி ஒரு இடைக்கால அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். அப்போது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், சம்பவம் நடந்த பகுதியில் பணியை நடத்தி வந்த ஒப்பந்த நிறுவனத்தை கருப்புப் பட்டியலில் சேர்த்துள்ளோம். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
The post கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் விரிசல் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.