டெல்லி : பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டவர்களை சிறையில் வைத்திருக்கவே அமலாக்கத்துறை விரும்புவதாக குற்றம் சாட்டி உள்ள உச்சநீதிமன்றம், இதனை பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் சாடி உள்ளது. கடந்த டிசம்பர் 19ம் தேதி பண மோசடி வழக்கு ஒன்றில் தொடர்புடைய பெண்ணின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் ஆஜரான அமலாக்கத்துறை சட்ட அதிகாரி ஒருவர், பிஎம்எல்ஏ சட்டப்பிரிவு 45 துணைப்பிரிவு 1ன் கீழ் உள்ள கடுமையான நிபந்தனைகள் பெண்களுக்கும் பொருந்தும் என கூறி ஜாமீன் தர எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.
உண்மையில் பிஎம்எல்ஏ பிரிவு 45 துணைப்பிரிவு 1ல் உள்ள ஒரு விதி என்னவென்றால் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டால் , மேற்கண்ட பிரிவுகளின் கீழ் வரும் ஒரு நபரை விடுவிக்கலாம் என்று கூறுகிறது. இந்த நிலையில், நேற்றைய விசாரணையின் போது அமலாக்கத்துறை சட்ட அதிகாரியின் தவறை சுட்டிக் காட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், இது முற்றிலும் அபத்தமான செயல் என்று விமர்சித்துள்ளனர். இது தகவல் தொடர்பு இடைவெளி காரணமாக ஏற்பட்ட கவன குறைவு என்று கூறிய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரினார்.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்களை சிறையிலேயே வைத்திருக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் நோக்கத்தையே இது பிரதிபலிப்பதாக சாடிய நீதிபதிகள், சட்டத்திற்கு முரணான அமலாக்கத்துறையின் இத்தகைய வாதங்களை பொறுத்து கொள்ள முடியாது என்று எச்சரித்தனர். ஒன்றிய அரசுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு சட்டத்தின் அடிப்படை விதிகள் தெரியாவிட்டால் அவர்கள் ஏன் வழக்கில் ஆஜராக வேண்டும் என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர்.
The post கைது செய்தவர்களை சிறையில் வைத்திருக்கவே அமலாக்கத்துறை விரும்புவதாக உச்சநீதிமன்றம் கண்டனம் : பொறுத்த கொள்ள முடியாது என கண்டிப்பு!! appeared first on Dinakaran.