திருமலை: சிவராத்திரி விழாவையொட்டி கோயிலுக்கு வனப்பகுதி வழியாக நள்ளிரவு நடந்து சென்ற 3 பக்தர்கள் யானைகள் தாக்கியதில் இறந்தனர். ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் குண்டலகோனா வனப்பகுதியில் சிவன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிவராத்திரி விழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் வனப்பகுதி வழியாக பாதயாத்திரையாக சென்று வழிபடுவார்கள். இந்த வனப்பகுதியில் சிறுத்தைகள், யானைகள், கரடி உள்ளிட்டவை வசித்து வருகின்றன.
அவை நள்ளிரவில் நடமாடுவது வழக்கம். இந்நிலையில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏராளமான பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதிக்குள் நடந்து சென்றனர். அப்போது அவ்வழியாக வந்த காட்டு யானைக்கூட்டம் பக்தர்களை விரட்டியது. இதில் பலரை சுற்றிவளைத்து தும்பிக்கையால் தூக்கிவீசியும் காலால் மிதித்தும் தாக்கியது. இந்த சம்பவத்தில் அன்னமய்யா மாவட்டத்தை சேர்ந்த தினேஷ்(40), மன்னம்மா(45), திருப்பதியைச் சேர்ந்த சங்கல்ராயுடு(50) ஆகிய 3 பக்தர்கள் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தனர்.
2 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று கிராம மக்கள் உதவியுடன் சடலங்களை மீட்டனர். மேலும் படுகாயமடைந்தவர்களை உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
The post கோயிலுக்கு சென்றபோது நள்ளிரவு பயங்கரம் யானைகள் மிதித்து 3 பக்தர்கள் பலி: ஆந்திர மாநிலத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.