திருச்சி: “சட்டப்பேரவை தேர்தல் நெருங்குகின்ற வேளையில் திமுக ஃபைல்ஸ்- 3 வெளியிடப்படும். அதில், திமுக மட்டுமல்லாது, அதன் கூட்டணி கட்சிகள் எடுத்த டெண்டர்கள், அதனால் அவர்கள் அடைந்த லாபங்கள் குறித்து அம்பலப்படுத்தப்படும். இதில் மூன்றரை வருடத்துக்கான டெண்டர் விவாகரம் புகைப்படத்தோடு வெளியிடப்படும்.” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக செல்லும் வழியில் சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலம் வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் இன்று (டிச.10) செய்தியாளர்களிடம் கூறியதாவது: டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சரை வரும் 12-ம் தேதி சந்திக்க உள்ளோம். அவரை சந்தித்த பின் ஒரு நல்ல முடிவோடு வருவோம். டங்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் சட்டப்பேரவையில் நாடகமாடியுள்ளார். முதல்வர் பதவி விலக வேண்டும் என்றால் டாஸ்மாக் பிரச்சினைக்காக முதலில் அவர் பதவி விலக வேண்டும்.