புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் நேற்றுடன் முடிவுக்கு வந்தது. அங்கு நாளை ஓட்டுப்பதிவு நடக்கிறது. டெல்லியில் கடந்த 2013 டிசம்பர் 28ம் தேதி முதல் ஆம்ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அடிசி உள்ளார். டெல்லி சட்டப்பேரவை பதவிக்காலம் பிப்.15ம் தேதி முடிவடைவதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு ஜன.10ம் தேதி மனுத்தாக்கல் தொடங்கியது. டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் சட்டப்பேரவை தேர்தல் ஒரே கட்டமாக நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இங்கு ஆட்சி பிடிக்க ஆளும் ஆம்ஆத்மி, பா.ஜ, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இதனால் தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. இத்தேர்தலில் மொத்தம் 699 பேர் போட்டியிடுகின்றனர். இதில் ஆம்ஆத்மி, பா.ஜ, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளின் சார்பில் 278 வேட்பாளர்களும், 29 வேட்பாளர்கள் மாநில கட்சிகள் சார்பிலும், 254 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பிலும், 138 பேர் சுயேட்சையாகவும் களம் இறங்கி உள்ளனர். முன்னாள் முதல்வரும், ஆளும் ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான கெஜ்ரிவால் போட்டியிடும் புதுடெல்லி தொகுதியில் அதிகபட்சமாக 23 பேர் போட்டியில் உள்ளனர்.
டெல்லி மதுபான ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வந்ததும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு கடந்த 3 மாதத்திற்கு முன்பே தேர்தல் வேலையை தொடங்கினார். அவருக்கு துணையாக டெல்லி முதல்வர் அடிசி, பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான்சிங், டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியா மற்றும் அமைச்சர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர். உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ்யாதவும் அங்கு ஆம்ஆத்மியை ஆதரித்து பிரசாரம் செய்தார். மறுமுனையில் பிரதமர் மோடி தலைமையில் பா.ஜவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. ஒன்றிய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர் வீதிவீதியாக பிரசாரம் செய்தனர்.
காங்கிரஸ் சார்பில் ராகுல்காந்தி, பிரியங்கா, கார்கே உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர். பரபரப்பாக நடந்து வந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து நாளை அங்கு ஓட்டுப்பதிவு நடக்கிறது. 70 தொகுதிகளிலும் இதற்காக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி தேர்தல் பாதுகாப்பிற்காக 220 கம்பெனி துணை ராணுவத்தினர், 19 ஆயிரம் ஊர்காவல்படை, 35,626 டெல்லி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 21,584 மின்னணு எந்திரங்கள், 18,943 விவிபேட் பயன்படுத்தப்பட உள்ளன. இதில் பதிவாகும் வாக்குகள் சனிக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். அப்போது டெல்லியில் புதிதாக ஆட்சி அமைப்பது யார் என்பது தெரிந்து விடும்.
இதற்கு முன்…
2015
ஆம்ஆத்மி 67
பா.ஜ 3
காங்கிரஸ் 0
2020
ஆம்ஆத்மி 62
பா.ஜ 8
காங்கிரஸ் 0
டெல்லி தேர்தல் ஒரு பார்வை
மொத்த தொகுதிகள் 70
மொத்த வேட்பாளர்கள் 699
மொத்த வாக்காளர்கள் 1.55 கோடி
வாக்குச்சாவடிகள் 13,033
* ஈரோடு கிழக்கு தொகுதியிலும் நாளை வாக்குப்பதிவு
காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவன் மறைவால் காலியான ஈரோடு கிழக்கு தொகுதியிலும் நாளை இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடாமல் அதிமுக, பாஜக விலகியது. திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார், நாதக வேட்பாளராக சீதாலட்சுமி உட்பட 46 பேர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலுக்காக கடந்த 15 நாட்களுக்கு மேலாக நடந்த வந்த பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. தொகுதிக்கு தொடர்பில்லாத வெளியூரை சேர்ந்தவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டதையடுத்து மாலை 6 மணிக்கு மேல் அவர்கள் வெளியேறினர். இதையடுத்து நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது. 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 53 இடங்களில் 237 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
The post சட்டப்பேரவை தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது டெல்லியில் நாளை ஓட்டுப்பதிவு: சனிக்கிழமை ரிசல்ட் appeared first on Dinakaran.