ராய்ப்பூர் : சட்டீஸ்கரில் இன்று நடந்த என்கவுன்டரில் 30 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தாண்டு மட்டும் 150க்கும் மேற்பட்டோர் சட்டீஸ்கரில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் நாராயண்பூர்-பிஜாப்பூர் வனப்பகுதியில் அமைந்துள்ள அபுஜ்மத் காட்டுப் பகுதியில் நக்சல்கள் பதுங்கி இருப்பதாக உளவுத்தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. அதையடுத்து மாவட்ட ரிசர்வ் காவல்படை, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் சிறப்பு காவல் படை ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையில் குழு, குறிப்பிட்ட வனப்பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் வேட்டை நடத்தியது.
அப்போது இரு தரப்புக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 30 நக்சல்கள் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த என்கவுன்டரில், நக்சல்களின் முக்கிய தலைவனான பசவராஜ் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த மோதலில் ஏகே-47, தானியங்கி ஆயுதங்கள், வெடிபொருட்கள், நக்சல் பயன்படுத்தும் பொருட்கள் கைப்பற்றப்பட்டன. பாதுகாப்புப் படை வீரர்களில் ஒரு வீரர் காயமடைந்தார்; ஆனால் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று பஸ்தார் ஆய்வாளர் ஜெனரல் சுந்தர்ராஜ் உறுதிப்படுத்தியுள்ளார். தற்போது, அந்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு மட்டும் சட்டீஸ்கரில் 150க்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் கொல்லப்பட்டுள்ள நிலையில், இன்றைய அதிரடி நடவடிக்கை மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த என்கவுன்டரை ‘நக்சல் முக்த் பாரத் அபியான்’ (நக்சல் இல்லாத இந்தியா இயக்கம்) என்ற ஒன்றிய அரசின் இலக்கை நோக்கிய மற்றொரு பெரிய வெற்றியாக பாராட்டியுள்ளார். அடுத்தாண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நக்சலிசத்தை முற்றிலும் ஒழிக்க ஒன்றிய அரசு உறுதி பூண்டுள்ளதாகவும், மறுவாழ்வு வாய்ப்புகள் இருந்தபோதிலும் ஆயுதங்களை கீழே வைக்க மறுப்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
The post சட்டீஸ்கரில் பாதுகாப்புப் படையினரால் 30 நக்சல்கள் சுட்டுக் கொலை.. இந்தாண்டு மட்டும் 150க்கும் மேற்பட்டோர் பலி! appeared first on Dinakaran.