கரியாபந்த்: சட்டீஸ்கர் -ஒடிசா எல்லையில் கடந்த இரண்டு நாட்களில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் இரண்டு பெண் நக்சல்கள் உட்பட 14 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் ஆதிக்கத்தை ஒழிப்பதற்கு ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 2026ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் நாட்டிலும், மாநிலத்திலும் நக்சல்களை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உறுதியேற்றுள்ளனர்.
இதன் எதிரொலியாக நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையை சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 219 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக கரியாபந்த் மாவட்டத்தில் மெயின்பூர் காவல்நிலையக்கட்டுப்பாட்டில் உள்ள காட்டுப்பகுதியில் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் கீழ் நேற்று முன்தினம் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பெண் நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை மீண்டும் வீரர்கள் மற்றும் நக்சல்களிடையே துப்பாக்கி சூடு தொடங்கியது.
நேற்று காலை வரை இந்த துப்பாக்கி சண்டை நீடித்தது. மாவட்ட ரிசர்வ் காவல் படையினர், ரிசர்வ் படையினர், சட்டீஸ்கரின் கோப்ரா படையினர் மற்றும் ஒடிசா சிறப்பு நடவடிக்கை குழு இணைந்து நடத்திய இந்த என்கவுன்டரில் மேலும் 12 நக்சல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து துப்பாக்கிகள், வெடிமருந்துகள், வெடிகுண்டுகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட 11 நக்சல்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
சம்பந்தப்பட்ட பகுதியில் தொடர்ந்து துப்பாக்கி சண்டை நடந்து வருவதாகவும், உயிரிழந்த நக்சல்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு இந்த என்கவுன்டரையும் சேர்த்து தனித்தனி என்கவுன்டர்களில் இதுவரை மொத்தம் 40 நக்சல்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் பதிவில், ‘‘ நக்சல்களுக்கு மற்றொரு மிகப்பெரிய அடி. நக்சல் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கான உறுதியுடன் நமது பாதுகாப்பு படைகள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. நக்சல்கள் அதன் இறுதி மூச்சை இழுத்துக்கொண்டு இருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் கூறுகையில்,‘‘ஒன்றியம் மற்றும் மாநில பாஜ அரசின் கீழ் சட்டீஸ்கர் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சல்கள் அச்சுறுத்தலில் இருந்து விடுபடும்” என்றார்.
* ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டவர் சட்டீஸ்கரில் நேற்று சுட்டுக்கொல்லப்பட்ட 12 நக்சலைட்களில் மூத்த நக்சல் தலைவர் ஜெய்ராம் தலைக்கு ரூ.1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
The post சட்டீஸ்கர்-ஒடிசா எல்லையில் 14 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் அதிரடி appeared first on Dinakaran.