காந்திநகர்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மோடிக்கு நாளை பெண் போலீஸ் மட்டுமே பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக குஜராத் அமைச்சர் தெரிவித்தார். பிரதமர் மோடி இன்றும், நாளையும் குஜராத் மற்றும் தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்திற்கு செல்கிறார். சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ம் தேதி (நாளை) பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். அவருக்கு பெண் காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு அளிக்கவுள்ளனர்.
இதுகுறித்து குஜராத் உள்துறை இணையமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறுகையில், ‘குஜராத்தில் உள்ள வான்சி போர்சி கிராமத்தில் நடைபெறும் ‘லட்சபதி தீதி சம்மேளனத்தில்’ பிரதமர் கலந்து கொள்கிறார். நவ்சாரியில் உள்ள வான்சி போர்சி கிராமத்தில் உள்ள ஹெலிகாப்டர் பேடிற்கு பிரதமர் வருவது முதல் நிகழ்வு நடைபெறும் இடம் வரை அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் பெண் போலீசாரால் மட்டுமே கையாளப்படும். பெண் காவல்துறை அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் கான்ஸ்டபிள்கள் பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வர்.
2,100க்கும் மேற்பட்ட பெண் கான்ஸ்டபிள்கள், 187 சப்-இன்ஸ்பெக்டர்கள், 61 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், 16 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ஐந்து எஸ்பிக்கள், ஒரு டிஜிபி மற்றும் ஒரு கூடுதல் டிஜிபி அந்தஸ்து அதிகாரி ஆகியோர் பெண்களாக இருப்பார்கள். மூத்த பெண் ஐபிஎஸ் அதிகாரியும் உள்துறை செயலாளருமான நிபுனா தோரவனே பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிடுவார். மகளிர் தினத்தன்று உலகிற்கு வலுவான செய்தியை அனுப்புவது மட்டுமல்லாமல், குஜராத்தை பாதுகாப்பான மாநிலமாக உருவாக்குவதில் பெண்களின் பங்களிப்பை வெளிப்படுத்தும் நிகழ்வாக இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது’ என்றார்.
The post சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மோடிக்கு நாளை பெண் போலீஸ் மட்டுமே பாதுகாப்பு: குஜராத் அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.