புதுடெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடியின் சமூக வலைதள பக்கத்தை கையாளும் பெண்களில், தமிழகத்தின் செஸ் வீராங்கனை வைசாலியும் இடம்பெற்றுள்ளார். சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, அன்றைய தினம் தனது சமூக வலைதள பக்கத்தை பெண்களே கையாளுவார்கள் என பிரதமர் மோடி சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று சர்வதேச மகளிர் தினம் என்பதால், மோடியின் சமூக வலைதள பக்கத்தை தமிழ்நாட்டைச் சேர்ந்த செஸ் வீராங்கனை வைசாலியும் கையாண்டு வருகிறார்.
பிரதமர் மோடி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், பெண்கள் தின வாழ்த்து பதிவிடப்பட்டிருக்கிறது. ‘நான் வைஷாலி, மகளிர் தினத்தன்று நமது பிரதமர் மோடியின் சமூக ஊடக பக்கத்தை கையாண்டு வருவதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன், அதுவும் உங்களில் பலருக்குத் தெரியும், நான் சதுரங்கம் விளையாடுகிறேன் என்று, மேலும் பல போட்டிகளில் நமது அன்பான நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் மிகவும் பெருமைப்படுகிறேன். நான் ஜூன் 21ம் தேதி பிறந்தேன்; அன்றைய தினம் தான் சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
எனது 6 வயதிலிருந்தே சதுரங்கம் விளையாடி வருகிறேன். சதுரங்கம் விளையாடுவது எனக்கு கற்றல் முறையாகும். இந்த விளையாட்டு எனக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பயணமாக இருந்து வருகிறது. பெண்கள் அனைவருக்கும் ஒரு செய்தியை கொடுக்க விரும்புகிறேன். தடைகள் எதுவாக இருந்தாலும் உங்கள் கனவுகளை நோக்கி பயணியுங்கள். உங்களது ஆர்வமே உங்களது வெற்றிக்கு சக்தி அளிக்கும். பெண்கள் தங்கள் கனவுகளைப் பின்பற்றவும், அவர்கள் தேர்ந்தெடுக்கும் துறையில் இருக்கும் தடைகளை உடைக்கவும் விரும்புகிறேன். ஏனென்றால் ெபண்களால் முடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எனது வாழ்க்கையில், எனது பெற்றோர்களான ரமேஷ்பாபு – நாகலட்சுமி ஆகியோரின் ஆசீர்வாதம் எனக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது. எனது சகோதரர் பிரக்ஞானந்தா, சிறந்த செஸ் வீரர், எனக்கான பயிற்சியாளர். அவரை சகோதரராக பெற்றது எனக்கு அதிர்ஷ்டம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
The post சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மோடியின் சமூக வலைதள பக்கத்தை கையாளும் தமிழகத்தின் செஸ் வீராங்கனை வைசாலி appeared first on Dinakaran.