டெல்லி: சிபிஎஸ்இ பள்ளிகளில் 10ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026-27 கல்வியாண்டிலிருந்து வருடத்திற்கு இரண்டு முறை சிபிஎஸ்இ தேர்வு முறை அமலுக்கு வரும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்த நிலையில், டெல்லியில் நேற்று பள்ளிக் கல்விச்செயலாளர், சிபிஎஸ்இ தலைவர் மற்றும் சிபிஎஸ்இ-யின் பிற அதிகாரிகளுடன் ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார். இதில், ஆண்டுக்கு இரண்டு முறை சிபிஎஸ்இ தேர்வுகளை நடத்துதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
அந்த ஆலோசனை கூட்டத்தில் மாணவர்களுக்கு மன அழுத்தமில்லாத கற்றல் சூழலை உருவாக்குவது அரசாங்கத்தின் முக்கிய கவனம் செலுத்தும் ஒரு படியாகும் என்று தெரிவித்த ஒன்றிய அமைச்சர், தேர்வு மேம்பாடு மற்றும் சீர்திருத்தத்தை நோக்கிய ஒரு முக்கிய படியாக இது அமையும் என்று தெரிவித்தார். மேலும் இந்த விவாதங்களின் வரைவு திட்டம் விரைவில் சிபிஎஸ்இ-யால் பொதுவெளியில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார். இந்த சீர்திருத்தம் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய விதிகளை செயல்படுத்துவதில் மற்றொரு முக்கியமான படியாகும் எனவும் மாணவர்களிடையே தேர்வு தொடர்பான மன அழுத்தத்தைக் குறைக்க இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அடுத்த ஆண்டு முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளதை தொடர்ந்து சிபிஎஸ்இ 12ம் வகுப்புக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளது. ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு, மாணவர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என கல்வியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
The post சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு 2 முறை பொதுத்தேர்வு: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை! appeared first on Dinakaran.