டெல்லி: டெல்லியில் மொத்தமுள்ள 70 பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் டெல்லியில் தனித்து போட்டியிடுவதால், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) ஆகிய 3 கட்சிகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் தீவிர பரப்புரை மேற்கொண்டு வருகிறது.
நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது. அதில்; டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ் தனது ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்றும். நகரத்தில் வசிப்பவர்களுக்கு ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், இலவச ரேசன் பொருட்கள், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஏற்கனவே பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500வழங்கப்படும் என காங்கிரஸ் அறிவித்தது. மேலும் ரூ-25லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் உறுதியளித்துள்ளது
இந்நிலையில் பாஜகவின் தேர்தல் வாக்குறுதியை பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். டெல்லியில் பாஜக ஆட்சி அமைந்தாலும் தற்போது செயல்படும் நலத்திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பாஜக ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு மாதம் ரூ.2500 ஊக்கத்தொகை வழங்கப்படும். டெல்லியில் முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பெண்களுக்கு ரூ.2500 வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். ஏழை சகோதரிகளுக்கு 500 ரூபாய்க்கு சிலிண்டர் வழங்கப்படும். ஹோலி, தீபாவளி அன்று இலவச சிலிண்டர்கள் வழங்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய ஜே.பி.நட்டா; 2021-ம் ஆண்டு அவர்கள் மாதம் ரூ. 2,100 கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால், அவர்கள் டெல்லியிலோ அல்லது பஞ்சாப்பிலோ கொடுக்கவில்லை. அதேபோல், 2024-ம் ஆண்டு மாதம் ரூ. 1,000 கொடுப்பதாக சொன்னார்கள். அதையும் அவர்கள் டெல்லியிலோ அல்லது பஞ்சாப்பிலோ கொடுக்கவில்லை. இதுமட்டுமின்றி சிலிண்டருக்கு மானியம் வழங்குவதாக சொன்னார்கள். அதனையும் கொடுக்கவில்லை” என்று ஆம் ஆத்மி கட்சியை விமர்சித்தார்.
The post சிலிண்டர் ரூ.500, பெண்களுக்கு மாதம் ரூ.2500 ஊக்கத்தொகை: டெல்லி தேர்தல் வாக்குறுதியை வெளியிட்டது பாஜக appeared first on Dinakaran.