* திடீர் சோதனையால் கும்பல் தப்பி ஓட்டம்
* 21 வாகனங்கள் பறிமுதல் – பரபரப்பு தகவல்
சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட கல்குவாரியில், நள்ளிரவில் கனிம வளங்களை வெட்டி, வெளி மாநிலங்களுக்கு போலி ரசீது மூலம் கடத்தப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. 21 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், ராசிபுரம், சேந்தமங்கலம், எருமப்பட்டி, திருச்செங்கோடு, பரமத்தி, வெண்ணந்தூர் ஆகிய ஒன்றியங்களில் 30க்கும் மேற்பட்ட சிறிய, பெரிய கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. குத்தகை அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை குவாரிகள் ஏலம் விடப்படும். குத்தகை காலம் நிறைவடைந்ததும் அதை புதுப்பிப்பது அல்லது மீண்டும் ஏலத்தில் பங்கேற்று குவாரியை எடுப்பது வழக்கம். ஆனால், சேந்தமங்கலம் ஒன்றியம் கொண்டமநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள சில குவாரிகள், குத்தகை காலம் முடிவடைந்து பல மாதங்களாகியும், குத்தகைதாரர்கள் அவற்றை புதுப்பிக்காமல், சிற்பங்களுக்கு பயன்படும் வகையிலான பெரிய கற்களை வெட்டியெடுத்து வந்துள்ளனர்.
இதுகுறித்து கலெக்டர் உமாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் நாமக்கல் ஆர்டிஓ பார்த்திபன், தாசில்தார்கள் சீனிவாசன், வெங்கடேஸ்வரன், கனிமவளத்துறை, வருவாய்த்துறையினர் போலீசார் அடங்கிய குழு அதிரடியாக கொண்டமநாயக்கன்பட்டி குவாரியில், கடந்த 19ம் தேதி இரவு திடீர் சோதனை நடத்தினர். அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம், லாரிகள், டிராக்டர்கள் என 20க்கும் மேற்பட்ட வாகனங்களும், பாறைகளை உடைக்கும் கருவிகள், கூலி ஆட்களும் இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அதிகாரிகளை கண்டதும் வாகன ஓட்டுநர்கள், கூலி ஆட்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து அதிகாரிகள் அங்கிருந்த 21 வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதில் 17 வாகனங்களை நாமக்கல் ஆயுதப்படை மைதானத்துக்கும், 4 வாகனங்களை சேந்தமங்கலம் தாலுகா அலுவலகத்துக்கும் கொண்டு சென்றனர்.
அந்த வாகனங்களின் உரிமையாளர்கள் யார் என்பது குறித்த விசாரணையும், குவாரிகளில் வெட்டப்பட்ட கனிம வளங்கள் மதிப்பீடு, பரப்பளவு ஆகியவற்றை கணக்கிடும் பணியும் வருவாய்த்துறையினர் இரு நாட்களாக ஆய்வு செய்து வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களின் கீழ் ஆய்வு நடத்தும் அதிகாரிகள், கல்குவாரிகளை ஆய்வு செய்வதில்லை. நள்ளிரவில் மேற்கொண்ட திடீர் ஆய்வு குறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது, குத்தகை காலம் முடிவடைந்த பிறகும், கொண்டமநாயக்கன்பட்டி குவாரி இயங்கி வந்தது. அங்கிருந்து கற்களை வெட்டியெடுத்து, விட்டமநாயக்கன்பட்டி கிராமத்துக்கு கொண்டு சென்று பதுக்கியுள்ளனர்.
அதன்பிறகு வெளிமாவட்டம், மாநிலங்களுக்கு அவற்றை போலி ரசீதுகள் மூலம் எடுத்து சென்றுள்ளனர். தற்போது எவ்வளவு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன. மலையின் பரப்பளவு எவ்வளவு என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. குவாரிகளில் விதிகளை மீறி கற்களை வெட்டியெடுத்தோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். சேந்தமங்கலம் அருகே குவாரியில் அனுமதியின்றி நள்ளிரவில் கனிமவளங்களை வெட்டி கடத்த முயன்ற கும்பல் யார்? 21 வாகனங்களின் உரிமையாளர்கள் யார் என அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சேந்தமங்கலம் அருகே அனுமதியின்றி கைவரிசை; குத்தகை முடிந்த பிறகும் குவாரியில் கனிம வளங்கள் வெட்டி கடத்தல் appeared first on Dinakaran.