புளியங்குடி: புளியங்குடியில் தலைமை தபால் நிலையம் கட்ட 30ஆண்டுகளுக்கு முன்பே இடம் வாங்கியும் கட்டிடம் கட்டப்படாததால் தற்போது வரை வாடகை கட்டிடத்தில் மாடியில் இயங்குவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புளியங்குடியில் தபால் நிலையம் டிஎன் புதுக்குடி பள்ளிவாசல் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள தனியார் கட்டிட மாடியில் இயங்கி வருகிறது. தினமும் புளியங்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் பல்வேறு சேவைகளுக்காக தபால் நிலையம் வந்து செல்கின்றனர். பரபரப்பான பகுதியாக இருப்பதால் வாகன நிறுத்தம் இல்லாததாலும் மாடியில் தபால் நிலைய அலுவலகம் அமைந்து உள்ளதாலும் முதியவர்கள், பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். தபால் நிலைய அலுவலக பயன்பாட்டிற்கு என புளியங்குடி பாலசுப்பிரமணிய சன்னதி தெருவில் சுமார் 30 வருடங்களுக்கு முன்பாக சொந்தமாக இடம் வாங்கப்பட்டது.
அந்த இடம் புளியங்குடி பேருந்து நிலையம் அருகில் இருப்பதாலும் அகலமான சாலை வசதி இருப்பதால் அனைத்து தரப்பு மக்களும் வந்து செல்ல ஏற்றதாக இருக்கும். கட்டிடம் கட்ட மண் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் சுற்றுச்சுவர் கட்டியதோடு உரிய நிதி வழங்கப்படாதால் கட்டிடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. தற்போது புதர் மண்டிய நிலையில் சுற்று சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. இதுபற்றி சமுக ஆர்வலர் அருணாசலம் கூறுகையில், ‘புளியங்குடி தபால் நிலையத்திற்கு பல வருடங்களுக்கு முன்பே சொந்தமான இடம் புளியங்குடி வட பகுதியில் காம்பவுண்ட் சுவர் எழுப்பபட்ட நிலையில் உள்ளது. தற்போது மாடியில் தனியார் இடத்தில் இருக்கும் நிலையை சுட்டி காட்டி தபால் நிலையம் சொந்த இடத்தில் கட்டிடம் கட்டி இயங்க வேண்டும் என்று பல முறை அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கபடவில்லை.
வாகன நிறுத்தம் இல்லாததாலும் மாடியில் இருப்பதால் முதியவர்கள் படி ஏற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகரின் மையப்பகுதியில் உள்ள பல கோடி பெறுமான இடத்தை உபயோகபடுத்தாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் அதனை பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பொதுமக்கள் நலன் கருதி தபால் நிலையத்திற்கு வாங்கிய இடத்தில் கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
The post சொந்த இடம் இருந்தும் கட்டிடம் கட்டப்படாததால் புளியங்குடியில் வாடகை கட்டிடத்தில் இயங்கும் தபால் நிலையம் appeared first on Dinakaran.