சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது. நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலம் பொகரா மாவட்டம் கொமியா பகுதியில் உள்ள பிர்ஹொடிரா வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில போலீசாருடன் இணைந்து, மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலை தொடர்ந்து பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இரு தரப்பிற்கும் இடையே நடந்த மோதலில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதேவேளை, எல்லைப்பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் வீரமரணமடைந்தார். வீரமரணமடைந்த எல்லைப்பாதுகாப்புப்படை வீரர் அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை: எல்லைப்பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம்! appeared first on Dinakaran.