புதுடெல்லி: சீலம்பூர் சிறுவன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ‘லேடி டான்’ ஜிக்ரா, போலீஸ் காவலில் இரண்டு நாட்கள் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதையடுத்து அவரிடம் தனிப்படை போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைநகர் டெல்லியின் வடகிழக்கு டெல்லிக்கு உட்பட்ட சீலம்பூர் பகுதியில் வசித்த 17 வயது குணா என்ற சிறுவன், கவந்த சில நாட்களுக்கு முன் தனது வீட்டிலிருந்து சில மீட்டர் தொலைவில் இருக்கும் கடைக்கு சென்றார்.
உடல்நலம் பாதிக்கப்பட்ட தனது தந்தைக்கு டீ தயாரிப்பதற்காக பால் வாங்க சென்ற போது மர்ம நபர்கள் அந்த சிறுவனை மறித்தனர். பின்னர் சிறுவனை கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பினர். குணாலின் கொலைச் செய்தி பரவியதும், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான உள்ளூர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தக் கொலைக் குற்றத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரினர்.
குணாலின் குடும்பத்தினர், கொலை நடந்தபோது அங்கு ‘லேடி டான்’ என்று அறியப்படும் ஜிக்ரா என்ற பெண் இருந்ததாக குற்றம் சாட்டினர். அதையடுத்து டெல்லி காவல்துறை, ஜிக்ராவுடன் தொடர்புடைய அவரது உறவினரான சாஹில் கான், ரிஹான் மிர்ஸா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்தனர். ஏற்கனவே சமூக வலைதளங்களில் துப்பாக்கியுடன் வீடியோக்களை பகிர்ந்ததற்காக, ஆயுத சட்டத்தின் கீழ் ஜிக்ரா கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். கொலையான சிறுவன் குணாலின் வீட்டுக்கு அருகில் வாடகை வீட்டில் வசித்து வந்த ஜிக்ரா, மத்திய சிறையில் இருக்கும் கேங்ஸ்டர் ஹாஷிம் பாபாவின் மனைவி ஜோயாவுக்கு பவுன்சராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் ஜிக்ராவை மீண்டும் கைது செய்த போலீசார், அவரை டெல்லியின் கர்கர்டூமா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை மீட்கவும், வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை கைது செய்யவும் ஜிக்ராவை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்று காவல்துறை கோரியிருந்தது. அதை ஏற்றுக் கொண்ட கர்கர்டூமா நீதிமன்றம், ஜிக்ராவை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் உத்தரவை தொடர்ந்து தற்போது சிறுவன் கொலை சம்பவம் தொடர்பாக ஜிக்ராவை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
The post டெல்லி சிறுவன் கொலை வழக்கு; ‘லேடி டான்’ ஜிக்ராவுக்கு 2 நாள் போலீஸ் காவல்: தனிப்படை போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.