டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மொத்தமுள்ள 70 பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தனித்து களம் காண்கின்றன. இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகள் டெல்லியில் தனித்து போட்டியிடுவதால், இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி) ஆகிய 3 கட்சிகள் ஆம் ஆத்மிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது. ஏற்கனவே வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 உதவித்தொகை வழங்கப்படும். ரூ.25 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு, பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்து உள்ளது.
இந்நிலையில், டெல்லியில் ஆட்சிக்கு வந்தால், வீடு ஒன்றுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம், ரூ.500 சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. இது குறித்து தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது; டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், நாங்கள் அளித்த ஐந்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என உறுதியளித்தார். அப்போது, டெல்லி காங்கிரஸ் தலைவர் தேவேந்திர யாதவ், கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
The post டெல்லியில் தேர்தல் வாக்குறுதியை அள்ளிவிட்ட காங்கிரஸ்.. ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்; 300 யூனிட் இலவச மின்சாரம்..!! appeared first on Dinakaran.