பெங்களூரு: தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. துபாயிலிருந்து கடந்த மார்ச் 5ம் தேதி 14.8 கிலோ தங்கத்தை உடலில் மறைத்து கடத்தி வந்த கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான ரன்யா ராவ் பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ரன்யாவின் வீட்டில் வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம், ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
தங்கக் கடத்தல் வழக்கில் பண முறைகேடும் நடைபெற்றிருக்கக் கூடும் என்ற சந்தேகத்தின்பேரில், அமலாக்கத் துறையும் சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது. மேலும் ரூ.34 கோடி மதிப்பிலான ரன்யா ராவின் சொத்துகளும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில், இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், அந்நிய செலாவணி பாதுகாப்பு, கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ரன்யாவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. ரன்யாவுடன் சேர்ந்து வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனை காலத்தில் ஜாமின் கோரி விண்ணப்பிக்க முடியாது என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு! appeared first on Dinakaran.