பெங்களூரு: தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யாராவுக்கு 12 ஏக்கர் நிலம் கடந்த பாஜ ஆட்சியில் ஒதுக்கீடு செய்யப்பட்டது அம்பலமாகியுள்ளது. இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
துபாயில் இருந்து ரூ.17 கோடி மதிப்பிலான 14 கிலோ தங்கம் கடத்தி வந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரன்யாராவ் மீதான புகாரை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், ரன்யா ராவுக்கு தற்போது ஆட்சியில் இருக்கும் மூன்று அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக பாஜ பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தி உள்ளது.
நடிகை ரன்யாராவுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர்கள் பெயரை வெளியிட வேண்டும். இந்த புகாரில் மாநில உள்துறை அமைச்சர் டாக்டர் பரமேஸ்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ரன்யாராவுடன் தொடர்பில் இருக்கும் அமைச்சர்கள் உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த புகாரை சிபிஐ விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும் என்று மாநில பாஜ தலைவர் விஜயேந்திரா வலியுறுத்தியுள்ளார். இதை காங்கிரஸ் மறுத்துள்ளது. வழக்கை சிபிஐதானே விசாரிக்கிறது. அவர்கள் விசாரித்து எது உண்மையோ அதை சொல்லட்டும் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தெரிவித்துள்ளார். இதனிடையே நடிகை ரம்யராவுக்கு துமகூரு மாவட்டம், ஷிரா தாலுகா தொழிற்பேட்டையில் 12 ஏக்கர் நிலம் பசவராஜ் பொம்மை தலைமையிலான முந்தைய பாஜ ஆட்சியில் ஒதுக்கப்பட்டது அம்பலமாகி உள்ளது.
இது குறித்து கர்நாடக மாநில தொழில் வளர்ச்சி கழகம் (கேஐஏடிபி) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நடிகை ரன்யாராவுக்கு சொந்தமான கிஸ்ரோட இண்டியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், துமகூரு மாவட்டம், ஷிரா தாலுகாவில் உள்ள தொழிற்பேட்டையில் ரூ.138 கோடி மதிப்பீட்டில் தொழிற்சாலை அமைப்பதற்காக பாஜ ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த முருகேஷ் நிராணி சிபாரிசு பேரில் கடந்த 2023 ஜனவரி 2ம் தேதி 12 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது. தங்க கடத்தலில் சிக்கிய நடிகைகக்கு பாஜ அரசு 12 ஏக்கர் நிலம் ஒதுக்கிய விவகாரம் கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
* ரன்யாராவிடம் வெளிநாட்டு வாட்சுகள்
துபாய் நாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்த புகாரில் ஒன்றிய வருவாய் புலனாய்வு துறை (டிஆர்ஐ) நடிகை ரன்யாராவை கைது செய்துள்ளதுடன் நீதிமன்றத்தின் மூலம் காவலில் எடுத்து கடந்த மூன்று நாட்களாக விசாரணை நடத்தினர். இதில் கடத்தல் புகாரில் அவருக்கு யார் யாருடன் தொடர்பு உள்ளது, எத்தனை முறை தங்கம் கடத்தி உள்ளார். எந்தெந்த நாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வந்துள்ளார் என்ற விவரம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது. வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரும் தங்கம் யார் யார் கையில் கொடுக்கப்பட்டது என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனிடையில் பெங்களூரு லாவேலி சாலையில் உள்ள ரன்யாராவ் வீட்டிற்கு அழைத்து சென்று சோதனை நடத்தில் அவரது வீட்டில் கோடிகணக்கான மதிப்புள்ள 30க்கும் மேற்பட்ட வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வாட்சுகள் பறிமுதல் செய்துள்ளனர். அந்த வாட்சுகள் வாங்கியது தொடர்பாக டிஆர்ஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
* 14 நாள் நீதிமன்ற காவல்
சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ரன்யாராவை, வருவாய் புலனாய் பிரிவு அதிகாரிகள் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அவரது போலீஸ் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதையடுத்து, அவர் நேற்று பொருளாதார குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்றம் காவலில் வைக்க உத்தரவிட்டது.
The post தங்கம் கடத்தல் வழக்கில் சிக்கிய நடிகை ரன்யாராவுக்கு 12 ஏக்கர் நிலம் பாஜ அரசு வழங்கியது அம்பலம்: கர்நாடக அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.