சென்னை: “மாநிலங்களவையில் அரிய வகை கனிம வளங்கள் தொடர்பான சட்டத்தை அதிமுக ஆதரித்ததன் விளைவுதான், டங்ஸ்டன் திட்டம் தமிழகத்துக்கு வந்துள்ளது. ஆனால், திமுக அந்தச் சட்டத்தை எதிர்த்தது. ஸ்டாலின் முதல்வராக இருக்கிற வரை இந்தத் திட்டத்தை அனுமதிக்க மாட்டோம். அதுவரை ஒரு பிடி மண்ணைக்கூட அங்கேயிருந்து எடுப்பதற்கு தமிழக அரசு நிச்சயமாக அனுமதிக்காது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக, நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது: “மதுரை, மேலூர் அருகே அரிட்டாப்பட்டி பகுதியிலே டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்ட காலகட்டத்தில் அந்த சுரங்கத்தை எந்தவொரு காலகட்டத்திலும் நிச்சயமாக அங்கே அமைப்பதற்கு அனுமதிக்கமாட்டேன் என்று சொன்னவர் தமிழக முதல்வர். அமைக்க மாட்டேன் என்று சொன்னது மாத்திரமல்ல; தான் முதல்வராக இருக்கின்ற வரையில் அங்கே அந்த டங்ஸ்டன் சுரங்கத்தை வர விடமாட்டோமென்று நெஞ்சுரத்தோடு இந்த அவையிலே அறிவித்தவர் முதல்வர்.