தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததும் இந்து சமய அறநிலைத்துறை முற்றிலுமாக ரத்து செய்யப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை திருப்பதியில் நடைபெற்று வரும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அறிவித்தார்.
திருப்பதி ஆஷா அரங்கில் ‘டெம்பிள் கனெக்ட்’ நிறுவனம் சார்பில் 3 நாட்கள் நடைபெறும் சர்வதேச கோயில்கள் மாநாடு மற்றும் கண்காட்சி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதனை ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் ஆகியோர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டு கடந்த திங்கட்கிழமையன்று மாலை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர். இந்த மாநாட்டில் 58 நாடுகளில் இருந்து இந்து, சீக்கியம், பவுத்தம் மற்றும் ஜைன மதங்களை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். 1581 கோயில்கள் ஒரே குடையின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் கோயில் கலாச்சாரம், பண்பாடு, பராமரிப்பு, நிர்வாகம், பக்தர்களின் பங்கேற்பு, அரசுகளின் பங்கேற்பு குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.