நாமக்கல்: நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் முனியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் கவுதம் (36). இவர் துபாயில் பொறியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுஸ்மிதா. இவர்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளார். கடந்த ஆண்டு ஆகஸ்டில், சுஸ்மிதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்க்க வந்த கவுதம், கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஸ்கூட்டர் மீது சரக்கு வாகனம் மோதி இறந்தார்.
இந்நிலையில், கணவர் இறந்ததற்காக இழப்பீடு கேட்டு, கவுதமின் மனைவி சுஸ்மிதா தனியார் இன்சூரன்ஸ் கம்பெனி மீது, நாமக்கல் மோட்டார் வாகன விபத்து காப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதன்பின் நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் உதவிக்குழு மூலம் இந்த வழக்கு விசாரணை மாவட்ட சமரச மையத்தில் நடைபெற்றது. கடந்த 14ம் தேதி நடந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில், ஓய்வுபெற்ற நீதிபதி நல்லதம்பி தலைமையிலான வழக்கறிஞர்கள் விசாரித்தனர்.
இன்சூரன்ஸ் நிறுவனம் கவுதம் குடும்பத்திற்கு ரூ.5 கோடி இழப்பீடு வழங்க சம்மதம் தெரிவித்தது. இதைத்தொடர்ந்து, ரூ.5 கோடி இழப்பீடுக்கான உத்தரவை மாவட்ட முதன்மை நீதிபதி குருமூர்த்தி, சுஸ்மிதாவிடம் நேற்று மாலை வழங்கினார். இது குறித்து வழக்கறிஞர் வடிவேல் கூறுகையில், கவுதம் துபாயில் பொறியாளராக இருந்தார். மாதம் ரூ.3.25 லட்சம் சம்பளம் பெற்று வந்தார். அந்த அடிப்படையில் ரூ.5 கோடி இழப்பீடு வழங்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில், ஒரு விபத்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 9 மாதத்தில், அதிகப்படியான இழப்பீட்டு தொகை தரப்பட்டு சமரச தீர்வு காணப்பட்டுள்ளது இதுவே முதன்முறை என்றார்.
The post தமிழகத்தில் முதன்முறையாக விபத்து வழக்கில் ரூ.5 கோடி இழப்பீடு: பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நீதிபதி வழங்கினார் appeared first on Dinakaran.