புதுடெல்லி: தமிழர்களை இழிவாக விமர்சித்ததற்காக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் கருப்பு சட்டை அணிந்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்ற பட்ஜெட் 2ம் கட்ட கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், மும்மொழிக் கொள்கை மூலம் தமிழகத்தில் இந்தியை திணிக்க முயலும் ஒன்றிய பாஜ அரசு, தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழ்நாட்டின் பள்ளி கல்வித்துறைக்கான நிதியை வழங்காதது குறித்து திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்பதாக கூறிவிட்டு திடீரென தமிழ்நாடு அரசு பின்வாங்கியதாக குற்றம்சாட்டிய நிலையில், தமிழக எம்பிக்களை நாகரீகமற்றவர்கள், நேர்மையற்றவர்கள் என கடுமையாக இழிவுபடுத்தினார். தமிழ்நாடு அரசையும், எம்பிக்களையும், ஒட்டுமொத்த தமிழர்களையும் இவ்வாறு இழிவுபடுத்தியது மனதை மிகவும் புண்படுத்தியதாக திமுக எம்பி கனிமொழி வேதனை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய தனது வார்த்தையை திரும்பப் பெறுவதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
ஆனாலும் தமிழர்களை இழிவுபடுத்தியது மற்றும் தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்வதாக உறுதி அளித்தது என அவைக்கு தவறான தகவல் கொடுத்தது தொடர்பாக அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக திமுக எம்பி கனிமொழி உரிமை மீறல் நோட்டீஸ் கொண்டு வந்தார். அதே போல, தமிழர்களை இழிவுபடுத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்தன. அவரது உருவபொம்மை எரித்து எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டன.
இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டம் நேற்று காலை கூடுவதற்கு முன்பாக, அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கண்டனம் தெரிவித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் திமுக எம்பிக்கள் கனிமொழி, திருச்சி சிவா, மதிமுக எம்பி வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி தொல்.திருமாவளவன் உள்ளிட்ட எம்பிக்கள் பங்கேற்றனர். ஒன்றிய அரசை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்பிக்கள், அமைச்சர் தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆவேச முழக்கமிட்டனர்.
தமிழர்களை இழிவுபடுத்திய அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது பிரதமர் மோடி அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டுமென வலியுறுத்தினர். மேலும், ‘நாவை அடக்கு, ஆணவச் பேச்சை நிறுத்து, மன்னிப்பு கேள், தீயை தீண்டாதே, தமிழரை சீண்டாதே’ என வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். ‘தமிழ்நாடு கல்வி கற்பிக்கிறது, பாஜ சூழ்ச்சி செய்கி றது’ என கோஷமிட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மதிமுக தலைவர் வைகோ, ‘‘இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது ஆயிரக்கணக்கானோர் தங்கள் உயிரைக் கொடுத்துள்ளனர். 1965ல் போராடியவர்களில் நானும் ஒருவன்.
முழு தமிழகமும் இந்தி திணிப்பை எதிர்க்கிறது. அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் இந்தியை எங்கள் மீது திணிக்க முயற்சிக்கிறார். நாங்கள் அதை எதிர்ப்பதால், சர்ச்சையான வார்த்தைகளை பேசுகிறார். அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். திமுக நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி கூறுகையில், ‘தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. மும்மொழிக் கொள்கையிலும், தேசிய பொருளாதாரக் கொள்கையிலும் கையெழுத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. தமிழகக் குழந்தைகளின் எதிர்காலத்தை ஒன்றிய அரசு நாசமாக்குகிறது.
எங்களது மாணவர்களுக்கு தர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு ஜனநாயக விரோதமானது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்றார். பின்னர் நாடாளுமன்றம் தொடங்கியதும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் திமுக எம்பிக்கள் அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டுமென கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
மக்களவையில் மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன், ‘‘இந்தியா ஒன்றும் ஹிந்தியா கிடையாது. கல்விக்கு நிதி வழங்குவதை புரிந்து கொள்ளாதவர்கள், தாய்மொழியை புரிந்து கொள்ள மாட்டார்கள்’’ என விமர்சித்தார். திமுக எம்பிக்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையே காரசார விவாதங்கள் நீடிப்பதால் நாடாளுமன்றம் பரபரப்புடன் இருந்து வருகிறது.
* மொழி உரிமை மீதான நேரடித் தாக்குதல்
மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் திமுக எம்பி கனிமொழி என்விஎன் சோமு பேசுகையில், ‘‘மோடி ஆட்சியில் கல்வித்துறையில் சர்ச்சைக்குரிய பாடத்திட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. நீட் போன்றவற்றை அமல்படுத்தி மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. தேசிய கல்விக் கொள்கை மூலம் மொழிக் கொள்கையிலும் மாநில அரசுகளை ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது. தேசிய கல்விக் கொள்கையை ஏற்காததால் தமிழகத்திற்கான பள்ளிக்கல்வி நிதியை வழங்க மறுக்கின்றனர். இது வெறும் நிர்வாக பிரச்னை அல்ல. மாநிலங்களின் தன்னாட்சி, இறையாண்மை மற்றும் தமிழகத்தின் மொழி உரிமை மீதான நேரடியான தாக்குதல்’’ என்றார்.
* 100 முறை மன்னிப்பு கேட்கக் கூட தயார்
மாநிலங்களவையில் நேற்று நடந்த விவாதத்தில் பதிலளித்து பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், ‘‘எனது வார்த்தைகள் யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக நான் 100 முறை கூட மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன். கடந்த 24 மணி நேரத்தில் நிறைய கேட்டு விட்டேன். நான் ஒடிசாவை சேர்ந்தவன். மொழி அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் மாநிலத்திலிருந்து வந்திருக்கிறேன். மொழியை பயன்படுத்தி ஒன்றிய அரசு சமூகத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஆனால் மோடி அரசு எப்போதும் அந்த பாவத்தை செய்யாது. உலகமே இன்று பன்மொழி கற்பதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறது என்றார்.
The post தமிழர்களை இழிவாக விமர்சித்த தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும்: நாடாளுமன்ற வளாகத்தில் கருப்புச் சட்டை அணிந்து திமுக கூட்டணி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.