டெல்லி: டெல்லி சென்றுள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஒன்றிய அமைச்சர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அந்த வகையில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோரை சந்தித்து மாநிலத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினார். இதற்கிடையில் மும்மொழிக் கல்விக் கொள்கைக்கு தமிழக அரசும், அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், தமிழ்நாட்டின் கல்விக் கொள்கையை பாராட்டிய ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியதாவது;
ஆந்திரப் பிரதேச பல்கலைக்கழகங்களில் மூன்று அல்ல, பத்து மொழிகளை ஊக்குவிக்கப் போகிறேன். தமிழ்நாட்டில் இருந்து பலர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்கின்றனர். அவர்கள் ஆங்கிலம் கற்று, மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர். கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர், ஒரு தமிழர்; அமெரிக்காவில் உயர் பதவிகளில் தமிழர்கள் இருக்கிறார்கள். ஐஏஸ் தேர்வுகளுக்கு பயிற்சி எடுக்க டெல்லி வருபவர்கள் அதிகம் பேர் தமிழர்கள்தான். பொதுவாக ஐஏஸ், ஐபிஎஸ் என்றால் அது தமிழ்நாடுதான் என்ற நிலை இருக்கும். தற்போது அவர்கள் சாதிக்க உலகம் முழுக்க பயணிக்கிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
The post தமிழர்கள் ஆங்கிலம் கற்று, மிகச் சிறப்பாக செயல்படுகின்றனர்: தமிழ்நாட்டை புகழ்ந்த ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு!! appeared first on Dinakaran.