சென்னை: செம்மொழியாம் தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக் களம் என்றால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் எப்போதும் முதன்மையாக நிற்கும். 1949 செப்டம்பர் 17 அன்று தி.மு.கழகம் பிறந்தது முதல் இந்த 75 ஆண்டுகளாக சந்திக்காத களம் இல்லை. எதிர்கொள்ளாத அடக்குமுறைகள் கிடையாது. வழக்குகள், சிறைவாசம், உயிர்த்தியாகம் எல்லாவற்றையும் தாங்கித்தான் தாய்மொழியாம் தமிழையும் தமிழர்களின் உரிமையையும் காக்கின்ற மகத்தான இயக்கமாகத் திகழ்கிறது. அதனால்தான், தி.மு.க ஒரு போராட்டத்தைக் கையில் எடுத்தால் இந்தியாவை ஆட்சி செய்பவர்கள் அஞ்சுகிறார்கள்–அலறுகிறார்கள். நம்மை நோக்கி தேசவிரோதிகள் என்று குற்றம்சாட்டுகிறார்கள். இந்திய ஒன்றியத்தின் பன்முகத் தன்மையையும் மொழி வழிப் பண்பாடுகளையும் சிதைத்து, ஒற்றுமையைக் குலைப்பவர்கள் தான் உண்மையான தேசவிரோதிகள்.