சென்னை: தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டை எதிரிகளால் நெருங்க முடியாத திராவிட அரசியல் கோட்டையாகக் கட்டியெழுப்பிய பெருந்தகை! உலக அரசியல் வரலாறு தொடங்கி உள்ளூர் நடப்புகள் வரை தமது தம்பிகளுக்கு நாள்தோறும் பாடம் நடத்திய அண்ணன்! எப்பேர்ப்பட்ட பகைவர்களையும் வாதத் திறமையால் தன் பக்கம் ஈர்க்கும் ஆற்றல்மிக்க சொற்பொழிவாளர்! ஜனநாயக வழியில் இவ்வளவு சாதிக்க முடியுமா என்று உலக அரசியல் ஆராய்ச்சியாளர்களின் புருவம் உயர்த்தியப் பேரறிஞர்!
திமுக என்னும் அசைக்க முடியாத ஆலமரத்தின் ஆணிவேர் அண்ணாவின் 56வது நினைவு நாள் இன்று! முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திருவல்லிக்கேணி வாலாஜா சாலையில் இருந்து பேரணியாகச் சென்று அண்ணா நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அவர் தம்பி கலைஞர் நினைவிடத்திலும் மலர்தூவி மரியாதை செலுத்தினோம். அண்ணாவின் புகழ் ஓங்கட்டும்! இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழினத்தைக் காக்க தெற்கிலிருந்து உதித்த ‘சூரியன்’ பேரறிஞர் அண்ணா. மாநில உரிமையை மூச்சாகக் கொண்டு, கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுத்த சுயமரியாதைக்காரர். திராவிட இன உரிமைப்போரின் கொள்கை வழிகாட்டியாகவும், இன்றும் ஆதிக்க சக்திகளுக்கு சிம்மச் சொப்பனமாக விளங்கும் தன்னிகரற்ற தலைவரின் கொள்கையைப் பின்பற்றி, அதிகாரக்குவியலை எதிர்த்து குரல் கொடுப்போம், மாநில உரிமையை வென்றெடுப்போம். இவ்வாறு பதிவில் அவர் கூறியுள்ளார்.
The post திமுக என்னும் அசைக்க முடியாத ஆலமரத்தின் ஆணிவேர் அண்ணா: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிவு appeared first on Dinakaran.