ஆந்திரா: திருப்பதி கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் இறந்ததற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என முன்னாள் அமைச்சர் ரோஜா கோரிக்கை விடுத்துள்ளார். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை துவங்கி 19ம் தேதி வரை 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்து இருக்கும். ஏழுமலையான் கோயிலில் சொர்க்கவாசல் பிரவேசம் செய்து ஏழுமலையான வழிபட இலவச தரிசன டோக்கன்களை வழங்க திருப்பதியில் 8 இடங்களிலும் திருமலையில் ஒரு இடத்திலும் தேவஸ்தான நிர்வாகம் 94 கவுண்டர்களை அமைத்துள்ளது. அந்த கவுன்டர்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் இம்மாதம் 10, 11, 12 ஆகிய நாட்களுக்கான இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை வழங்கப்பட இருக்கும் டோக்கன்களை வாங்க நேற்று மதியம் முதலே கவுன்டர்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டனர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் காரணத்தால் டோக்கன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் நேரம் கடந்து செல்ல செல்ல முண்டியடித்துக் கொண்டு வரிசையில் நுழைய முயன்றதால் கவுன்டர்கள் முன்பு கடும் கூட்ட நெரிசல், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டுள்ள போலீசார் அவர்களை கட்டுப்படுத்துவதில் கடும் சிரமத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வந்திருப்பது பக்தர்கள் என்பதால் தடியடி நடத்தவோ கடுமையாக நடந்து கொள்ளவோ இயலாது என்பதால் சமாளித்து வரிசையில் போலீசார் அனுப்பினர்.
ஆனால் நேரமாக நேரமாக கூட்டம் அதிகரித்த நிலையில் பலர் நெரிசலில் சிக்கி மயக்கமடைந்தனர். இதில், சேலத்தை சேர்ந்த மல்லிகா (40) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் 5 பக்தர்கள் கவலைக்கிடமாக இருந்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர்களும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்த 30 பக்தர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இலவச தரிசன டோக்கன்கள் பெற காத்திருந்த பக்தர்களிடையே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உள்பட 6 பக்தர்கள் பலியான சம்பவம் திருப்பதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், திருப்பதி கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் உயிரிழந்த விவகாரம் குறித்து ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா கூறுகையில்; புஷ்பா 2 கூட்ட நெரிசல் விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனை கைது செய்ததைப் போல, திருப்பதி கூட்ட நெரிசல் சம்பவத்திலும் இதற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும். லட்டு விவகாரத்தில் பரிகார தீட்சை செய்த துணை முதல்வர் பவன் கல்யாண், இந்த சம்பவத்திற்கும் தீட்சை செய்வாரா? அல்லது சந்திரபாபு நாயுடுவை ராஜினாமா செய்ய வைப்பாரா?. திருப்பதியில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும். தவறு செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று கூறினார்.
The post திருப்பதி விவகாரம்.. விசாரணைக்கு பிரதமர் மோடி உத்தரவிட வேண்டும்: முன்னாள் அமைச்சர் ரோஜா கோரிக்கை..!! appeared first on Dinakaran.