ஜான்சி: விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கணவனுக்கு தர்மஅடி கொடுத்த மனைவியால், திருமண வீட்டில் பதற்றம் ஏற்பட்டது. மேலும் மணமேடையில் உறவினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் விசாரித்து வருகின்றனர். உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சி அடுத்த சதார் பஜார் பகுதியை சேர்ந்த வித்யா பிரகாஷ் விக்ரம் – வந்தனா ஸ்ரீபிரகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. மணமகன் திவ்யா பிரகாஷ் விக்ரம் மணமேடையில் அமர்ந்திருந்தபோது, திடீரென ஒரு பெண் தனது குடும்பத்தினருடன் அங்கு வந்தார்.
அவர் மணமகனை சரமாரியாக தாக்கினார். அங்கிருந்தவர்கள் அந்தப் பெண்ணையும், அவருடன் வந்தவர்களையும் அங்கிருந்து விலக்கினர். ஆனால் அந்தப் பெண் தொடர்ந்து கூச்சலிட்டார். இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘திருமண மண்டபத்தில் பிரச்னை செய்த சாரிகா என்ற பெண், மணமகன் திவ்யா பிரகாஷின் முதல் மனைவியாவார். இவர்கள் இருவருக்கும் கடந்த 2020ல் திருமணம் நடந்தது.
திருமணமான சில மாதங்களுக்குப் பிறகு, அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர். விவாகரத்து கோரி நீதிமன்றத்தையும் நாடினர். இந்த விவாகரத்து வழக்கு இன்னும் நிலுவையில் இருந்து வருகிறது. மணமகனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவருக்கும் நடந்த திருமணத்திற்குப் பிறகு தனது முதல் மனைவி சரிகா தனது நகைகள் மற்றும் பணத்துடன் தனது வீட்டை விட்டு வெளியேறிவிட்டார். அவர் தான் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கடந்தாண்டு ஏப்ரலில் நீதிமன்றத்தில் சரிகா சரியாக ஆஜராகாததால், ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பின் அடிப்படையில் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய வித்யா பிரகாஷ் விக்ரம் முடிவு செய்தார். அதன்படி வந்தனா என்ற பெண்ணுடன் வித்யா பிரகாஷூக்கு இரண்டாவது திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால் அங்கு தனது குடும்பத்தினருடன் வந்த முதல் மனைவி சரிகா, திருமணத்தை தடுத்து நிறுத்தி பிரச்னை செய்தார். இவ்விவகாரம் தொடர்பாக மணமகனையும், அவரது முதல் மனைவியையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறினர்.
The post திருமண வீட்டிற்குள் நுழைந்து மனைவி தடாலடி; விவாகரத்து செய்யாமல் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற கணவனுக்கு தர்மஅடி appeared first on Dinakaran.