திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் காதலி, தம்பி, பாட்டி, உறவினர்கள் உள்பட 5 பேரை வாலிபர் சுத்தியலால் அடித்து கொன்றதற்கு என்ன காரணம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் வெஞ்ஞாரமூடு அருகே உள்ள பேருமலை பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரகீம். இவரது மனைவி ஷெமி. இவர்களது மகன்கள் அபான் (23), அப்சான் (13). அப்துல் ரகீம் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக சவுதியில் பணிபுரிந்து வருகிறார்.
அப்சான் அருகிலுள்ள ஒரு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தான். அபான் கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் வேலை தேடி தந்தை பணிபுரியும் சவுதிக்கு சென்றுள்ளார். ஆனால் பின்னர் இவர் ஊருக்கு திரும்பி விட்டார். இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியான பர்சானா என்பவரை காதலித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வெஞ்ஞாரமூடு போலீஸ் நிலையத்திற்கு வந்த அபான், தான் 6 பேரை கொலை செய்துள்ளதாக கூறி சரணடைந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அபானின் வீடு உள்ள பேருமலையிலிருந்து 25 கிமீ தொலைவில் உள்ள பாங்கோடு என்ற இடத்தில் அவரது பாட்டி சல்மா பீவி (88) வசித்து வந்தார்.
இங்குதான் முதலில் அபான் வந்துள்ளார். சமையலறையில் இருந்த சல்மா பீவியிடம் அவர் நகை கேட்டுள்ளார். ஆனால் கொடுக்க மறுத்ததால் சல்மா பீவியை சுத்தியலால் தலையில் அடித்துக் கொன்று விட்டு அபான் அங்கிருந்து நேராக புறப்பட்டு 9 கிமீ தொலைவில் உள்ள புல்லன்பாறை என்ற இடத்திற்கு சென்றார். இங்குதான் முன்னாள் மத்திய ரிசர்வ் படை வீரரான இவரது பெரியப்பா அப்துல் லத்தீப் (63) மற்றும் அவரது மனைவி சஜிதா பீவி (53) வசித்து வந்தனர்.
இவர்களையும் சுத்தியலால் தலையில் அடித்துக் கொன்று விட்டு நேராக பேருமலையில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு சென்றார். வீட்டில் இருந்த தாய் ஷெமியையும் தலையில் சுத்தியலால் தாக்கியுள்ளார். மாலையில் பள்ளி விட்டு வீட்டுக்கு வந்த தம்பி அப்சானையும் அவர் கொடூரமாக சுத்தியலால் தாக்கினார். காதலி பர்சானாவை தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வந்து சுத்தியலால் அடித்துள்ளார். அபான் கொடூரமாக தாக்கிய 6 பேரில் தாய் ஷெமி தவிர மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆபத்தான நிலையில் உள்ள ஷெமிக்கு வெஞ்ஞாரமூட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எலி மருந்து சாப்பிட்டதாக அபான் கூறியதால் அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். விசாரணையின்போது, அபான் போதை பொருள் பயன்படுத்தியிருந்தது தெரிய வந்தது. தனக்கு ரூ.75 லட்சத்திற்கும் மேல் கடன் இருப்பதாகவும் அதனால்தான் அனைவரையும் கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்ததாகவும் அபான் போலீசிடம் கூறினார்.
The post திருவனந்தபுரத்தில் காதலி, பாட்டி, தம்பி உள்பட 5 பேரை வாலிபர் கொன்றது ஏன்?பரபரப்பு தகவல்கள் appeared first on Dinakaran.