பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய சுற்றுலாப் புல்வெளியான பைசரானில் பாதுகாப்புப் படைகள் இல்லாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. பஹல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாகவும், அதை தொடர்ந்து எடுத்த நடவடிக்கை தொடர்பாகவும் ஒன்றிய அரசு கூட்டிய அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் இந்த கேள்வியை எழுப்பியது தெரியவந்துள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். பைசரான் பகுதியில் அவ்வளவு சுற்றுலா பயணிகள் கூடியிருந்த இடத்தில் ஏன் ஒரு ராணுவ வீரர் கூட ஆயுதம் ஏந்திய நிலையில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படவில்லை என்று அவர் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அரசிடம் இருந்து உரிய பதில் இல்லை என்று கூறப்படுகிறது.
இதே கேள்வியை மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்டோரும் எழுப்பினர். இதற்கு ஒன்றிய அரசின் தரப்பில், ‘இந்தப் பகுதி ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் அமர்நாத் யாத்திரைக்காக திறக்கப்படும்; அமர்நாத் யாத்ரீகர்கள் இங்கு ஓய்வு எடுப்பார்கள். ஆனால், இந்த முறை உள்ளூர் சுற்றுலா நிறுவனங்கள் அரசுக்கு தகவல் தெரிவிக்காமல் ஏப். 20ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளை அழைத்து வந்துள்ளன. இந்த தகவலை உள்ளூர் நிர்வாகத்திற்கு தெரிவிக்கவில்லை; இதனால், பாதுகாப்பு படைகள் அங்கு பயன்படுத்தப்படவில்லை.
பொதுவாக, ஜூன் மாதத்தில் அமர்நாத் யாத்திரை தொடங்குவதற்கு முன்பு பாதுகாப்பு படைகள் நிறுத்தப்படுவது வழக்கம்’ என்று தெரிவிக்கப்பட்டது. பஹல்காமில் நடந்த தாக்குதல் சம்பவம் உளவுத்துறை தோல்வியா? இல்லையா?, அல்லது பாதுகாப்பு குறைபாடா? இல்லையா? என்று அடுத்து கேட்டனர். இதற்கு ஒன்றிய அரசு தரப்பில், இந்தத் தாக்குதல் எந்த சூழலில் நடந்தது என்பதை கண்டறிய விசாரணை நடந்து வருவதாக பதிலளிக்கப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஏவுகணைத்தாக்குதல் நடத்த திட்டமா?
பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் சுமார் 40க்கும் மேற்பட்ட தீவிரவாத முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த முகாம்களில் பயிற்சி பெறும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் காஷ்மீர் எல்லைக்குள் ஊடுருவி அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்த முறை பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்படலாம். இல்லையெனில் டிரோன்கள் மூலம் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த தாக்குதலுக்கு வசதியாக இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பல் தற்போது குஜராத் கடல் பகுதியில் முகாமிட்டு உள்ளது. இந்த போர்க்கப்பலில் இருந்து ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. ஐஎன்எஸ் சூரத் போர்க்கப்பலில் பிரம்மோஸ், பராக் 8 ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதில் பிரம்மோஸ் ஏவுகணையை இடைமறித்து அழிக்க முடியாது. எனவே ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத முகாம்கள் மீது பிரம்மோஸ் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தினால் என்ன பயன்?
சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவது குறித்து ஐதராபாத் எம்பி அசாதுதீன் ஓவைசி கேள்வி எழுப்பினார். ‘இந்தியாவிடம் சிந்து நதி நீரைத் தேக்கி வைக்கவோ, தடுக்கவோ வசதி இல்லை என்றால், ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதால் என்ன பயன்?’ என்று கேட்டார். இதற்கு ஒன்றிய அரசின் தரப்பில், ‘இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என்ற நோக்கத்தை வெளிப்படுத்தவே இந்த ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டது. பாகிஸ்தானுக்கு கடுமையான செய்தியை அனுப்ப வேண்டும் என்பதற்காக எடுக்கப்பட்ட முடிவு’ என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
2 தீவிரவாதிகளின் வீடுகள் அழிப்பு
பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் பிரதான சந்தேக நபர் உட்பட இரண்டு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளின் வீடுகள், அங்கு வைக்கப்பட்டு இருந்த வெடிப்பொருட்கள் அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு பிஜ்பெஹரா மற்றும் டிராலில் உள்ள குரி கிராமத்தில் ஆதில் உசேன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோரின் வீடுகளில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினார்கள். இந்த தேடுதல் நடவடிக்கையின்போது அங்கு வைக்கப்பட்டு இருந்த வெடிப்பொருட்களை ராணுவ வீரர்கள் கண்டறிந்தனர். அப்போது அந்த வெடிப்பொருட்கள் வெடித்ததில் இரு வீடுகளும் சேதமடைந்தன. இதனால் அவை அழிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் அடில் உசேன் தோகர் முக்கிய குற்றவாளிகளில் ஒருவன். இதேபோல் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ஆசிப் ஷேக் தாக்குதலின் சதித்திட்டத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது.
சிம்லா ஆளுநர் மாளிகையில் பாக். கொடி மாயம்
சிம்லா ஒப்பந்தம் கையெழுத்தான ஆளுநர் மாளிகையில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க மேசையில் பாகிஸ்தான் கொடி மாயமானது. 1972ம் ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தை பாகிஸ்தான் ரத்து செய்த ஒரு நாளுக்கு பின் பாகிஸ்தான் கொடி மாயமானது. இமாச்சலப் பிரதேச ஆளுநர் மாளிகையின் கீர்த்தி ஹாலில் உள்ள மேசையில் மறைந்த இந்திரா காந்தி மற்றும் பூட்டோ ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் புகைப்படம் உள்ளது. அங்கிருந்த பாகிஸ்தான் கொடி எப்போது அகற்றப்பட்டது என்பது தெரியவில்லை.
அமர்நாத் யாத்திரைக்கு பாதிப்பு இல்லை: காஷ்மீர் துணை முதல்வர் பேட்டி
பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போதிலும் இந்த ஆண்டு நடக்க உள்ள அமர்நாத் யாத்திரைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று ஜம்மு காஷ்மீர் துணை முதல்வர் சுரீந்தர் சவுத்ரி நிருபர்களிடம் நேற்று தெரிவித்தார். அமர்நாத் யாத்திரைக்கு செல்லும் பக்தர்கள் பஹல்காமில் உள்ள முகாமில் தங்கி செல்வார்கள். இந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி அமர்நாத் புனித யாத்திரை தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்திற்கு தொடர்பா?
பஹல்காம் தாக்குதலில் தடைசெய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் இணைந்த குழுவால் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலும் வெளிநாட்டு தீவிரவாதிகள் உள்ளனர். மேலும் உள்ளூர் தீவிரவாதிகளும் அவர்களுடன் இணைந்து லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருவதும் தெரிய வந்துள்ளது. காஷ்மீரின் சோனாமார்க், பூட்டா பத்ரி மற்றும் கந்தர்பால் உட்பட அந்த பகுதி முழுவதும் நடந்த பல தாக்குதல்களின் பின்னணியில் ஹபீஸ் சயீத் இருந்ததாக பாதுகாப்பு அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன. ஹபீஸ் சயீத் மற்றும் அவரது துணைத்தலைவர் சயீபுல்லா ஆகியோரால் லஷ்கர் இ தொய்பா குழுக்கள் வழிநடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
The post தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய போது பஹல்காமில் ஏன் ஒரு ராணுவ வீரர்கள் கூட இல்லை?.. ஒன்றிய அரசிடம் எதிர்க்கட்சிகள் கேள்வி appeared first on Dinakaran.